இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு சென்றாரா சித்தராமையா? - பாஜக கிளப்பிய புதிய சர்ச்சை!

இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு சென்றாரா சித்தராமையா? - பாஜக கிளப்பிய புதிய சர்ச்சை!

கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சமீபத்தில் அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றதாக தெரிவித்து பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அன்றைய தினம் நான் இறைச்சி சாப்பிடவில்லை என்று சித்தராமையா தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி குடகுக்கு சென்ற சித்தராமையா, அசைவ உணவு சாப்பிட்ட பின்பு கொட்லிப்பேட்டையில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு சென்றதாக சர்ச்சை எழுந்தது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா "இறைச்சி சாப்பிடுவது பிரச்சினையா. ஒருவர் என்ன சாப்பிடுவது என்பது அவரின் தனிப்பட்ட உணவுப் பழக்கம். நான் இறைச்சி மற்றும் சைவ உணவு இரண்டையும் சாப்பிடுகிறேன், அது எனது பழக்கம். சிலர் இறைச்சி சாப்பிடுவதில்லை, அது அவர்களின் உணவுப் பழக்கம். பாஜகவுக்கு வேறு வேலை இல்லை. எனவே நாட்டின் "முக்கிய பிரச்சனைகளில்" இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சர்ச்சைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரையில் இது ஒரு பிரச்சனையே இல்லை. பலர் இறைச்சி சாப்பிடாமல் போகிறார்கள், பலர் சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள். பல இடங்களில் தெய்வங்களுக்கு இறைச்சி பிரசாதமாக வழங்கப்படுகிறது. உண்மையைச் சொன்னால் நான் அன்று இறைச்சி சாப்பிடவில்லை. அன்று கோழி கறி இருந்தாலும், மூங்கில் கறி மற்றும் அக்கி ரொட்டியை மட்டுமே நான் சாப்பிட்டேன்” என்றார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று தான் அசைவ உணவு உண்பவர் என்றும், இது எனது உணவுப் பழக்கம் என்றும், கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று கடவுள் எதுவும் கூறியிருக்கிறாரா என்று சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

அவரது கருத்துக்கு எதிர்வினையாற்றிய பாஜக மூத்த எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யத்னால், “சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால், பன்றி இறைச்சியை சாப்பிட்டுவிட்டு பள்ளி வாசலுக்கு வந்து பாருங்கள்" என தெரிவித்தார்

இந்த சவாலுக்கு பதிலளித்த சித்தராமையா, "நான் கோழி மற்றும் ஆட்டிறைச்சியை மட்டுமே சாப்பிடுவேன், வேறு எந்த இறைச்சியும் (பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சி) சாப்பிடுவதில்லை. ஆனால் அதை உண்பவர்களை நான் எதிர்க்கவில்லை, ஏனெனில் அது அவர்களின் உணவுப் பழக்கம். நான் கோவில்களுக்குச் செல்வேன், ஆனால் அதைத் தொழிலாக செய்யவில்லை. எனது கிராமத்தில் உள்ள கோவில்களுக்குச் செல்வேன். நான் ஏன் காஷ்மீரிலோ அல்லது வேறு இடத்திலோ உள்ள கடவுளைத் தேடிச் செல்ல வேண்டும். திருப்பதி, மகாதேஷ்வரா மலைகளுக்கு நான் பலமுறை சென்றிருக்கிறேன். சாமுண்டி மலை, நஞ்சனாகு கோவில் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் செல்கிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in