உண்மையிலேயே ஏழைகள் சிரிக்கிறார்களா முதல்வரே..?

உண்மையிலேயே ஏழைகள் சிரிக்கிறார்களா முதல்வரே..?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. ஏழைகள் சிரிப்பதற்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு செயல்படுத்தி நடைமுறைப்படுத்தினார் அவரது தம்பி கருணாநிதி. அவர் வழியில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அவரது மகன் ஸ்டாலின் ஏழையின் சிரிப்பில் கருணாநிதியைக் காண்கிறோம் என்கிறார்.

உண்மையில் ஸ்டாலின் ஆட்சியில் ஏழைகள் சிரிக்கிறார்களா? என்று கேட்டால் திமுகவினருக்கே பட்டென பதில் சொல்ல வரவில்லை. அப்படித்தான் இருக்கிறது ஆட்சியின் எதார்த்தம்.

இலவச மின்சாரத்தைத் தந்து ஏழை விவசாயிகளை சிரிக்க வைத்தார் கருணாநிதி.  இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக அது பார்க்கப்பட்டது. அதன் பிறகு தான் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் இதை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து ஆட்சியைப் பிடித்தன. அதன்விளைவாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அங்கெல்லாமும்கூட ஏழைகள் சிரித்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் மின் கட்டணமும், மின் சேவைகளுக்கான கட்டணமும் எந்த ஏழையையும சிரிக்கவைக்காது என்பது திமுக அரசுக்கும் நன்றாக தெரியும். 

நகரப் பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு உண்மையில் பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டம் என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலம், அன்றாடம் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து கூலி வேலைக்குச் செல்லும் ஏழைப் பெண்கள் பயன்பெறுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவையும்,  ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகத்தின் செலவுகளையும் சமாளிக்க முடியாமல், சாதாரண பேருந்துகள் அனைத்தையும் விரைவுப் பேருந்துகளாக போர்டை (மட்டும்) மாற்றி  கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தியுள்ளது முதல்வருக்கு தெரியாமலா இருக்கும் என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.

இரவு நேரப் பேருந்துகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு அதன்மூலம் எரிபொருள் சிக்கனம் செய்து செலவுகள் சமாளிக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகத்தில் சொல்கிறார்கள்.  இதனால் இரவில் தொலைதூரம் பயணம் செய்யும் நடுத்தர மக்கள் ஆம்னி பேருந்துகளை நாடவேண்டிய நிலையில் அவர்கள் எப்படிச் சிரிப்பார்கள் என்பதை ஸ்டாலினுக்கு எடுத்துச்சொல்வது யார்? 

ரேஷனில் விலையில்லா அரிசி தருகிறது அரசு. ஆனால், மளிகைப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் அன்றாடம் காய்ச்சிகளில் பெரும்பகுதியினர் வெறும் கஞ்சியைக் குடித்துப் பசியாறுகிறார்கள். மிளகாய் 200 ரூபாய்,  சமையல் எண்ணெய் 175 ரூபாய் என்று விற்றால்  எங்கிருந்து அவர்களுக்குச் சிரிப்பு வரும்? 

கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாடு வேகமாக முன்னேறியது. தொழில் வளர்ச்சி கண்டது தமிழகம். அதனால் வேலை வாய்ப்புகள் பெருகின. உயர் கல்வி வரை இலவசமாக வழங்கப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. பெண்களின்  முன்னேற்றத்திற்காக கருணாநிதி அறிமுகம் செய்த பல திட்டங்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாக இருந்தது. 

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் அதில் முக்கியமானது. இந்தத் திட்டத்தின் மூலம், பத்தாம் வகுப்புவரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகையும் தாலிக்கு அரை சவரன் தங்கமும் தந்தார் கருணாநிதி. இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழைப்பெண்களின் திருமண கனவு நிறைவேறியது. பெண்களின் படிப்புக்காக மட்டும் கருணாநிதி இந்தத் திட்டத்தை கொண்டு வந்தார் என்று இவர்கள் நினைத்தால் கருணாநிதியை இவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.   

ஏழைகள் தங்கள்வீட்டுப் பெண்ணின் திருமணத்தை நடத்தி வைக்க எவ்வளவு தூரம் கஷ்டப்படுவார்கள் என்பதை உணர்ந்திருந்த கருணாநிதி, தாலிக்குத் தங்கத்தையும் நிதியையும் கொடுத்து அவர்களின் திருமணச் சுமையைக் குறைத்தார். அதன் மகத்துவம் புரிந்ததால் தான் தனது ஆட்சியிலும்  அந்தத் திட்டத்தை  நிறுத்தாமல் ஜெயலலிதாவும் தொடர்ந்தார்.  ஒரு சவரனாக  தங்கத்தையும்,  ஐம்பதாயிரம் ரூபாயாக நிதியையும் உயர்த்தினார். அது உண்மையிலேயே ஏழைகளைச் சிரிக்க வைத்தது. 

அத்தகைய சிறப்பு வாய்ந்த அந்தத் திட்டத்தை ‘புதுமைப்பெண் உயர்கல்வி திட்டம்’ என இந்த அரசு மாற்றி இருக்கிறது. இதனால் ஏழையின் சிரிப்பு எங்கோ மறைந்துவிட்டது.  மாதம்  ஆயிரம் ரூபாய் என்பது பெண்களின் படிப்புக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், திருமணத்தின்போது செலவுக்கு என்ன செய்வது என்று திகைத்து நிற்பார்களே? என்று கேட்டால் அதற்கு அரசிடம் பதில் இல்லை. ஒரு சவரன் தங்கமும் 50 ஆயிரம் ரூபாயும் இருந்தால் மஞ்சள் கயிற்றில்கூட ஒருபெண்ணுக்கு மாங்கல்யம் ஏறிவிடும். இது தெரிந்தும் இந்தத் திட்டத்தை  கைவிட்டிருக்கும் ஸ்டாலின், ஏழையின் சிரிப்பில் கருணாநிதியைக் காண்பதாக எப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை! 

அதிமுக ஆட்சியின் இறங்குமுகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஒரு குடும்ப அட்டைக்கு 2,500 ரூபாய் கொடுத்தார் ஈபிஎஸ். இதற்கான உள்காரணங்கள் என்னவாகவே இருந்தாலும் அந்த சமயத்தில் இந்தப் பணம் உண்மையிலேயே ஏழைகளை சிரிக்க வைத்தது. ஆனால், திமுக ஆட்சியில் பணத்துக்குப் பதிலாக பொங்கல் பரிசுப்பொருட்களைக் கொடுத்தார்கள். அதுவும் தரமில்லை என்று ஆங்காங்கே புகார்கள் வெடித்ததால் எதிர்க்கட்சிகள் தான் சிரித்தன; ஏழைகள் சிறக்கவில்லை.

சொத்து வரியை உயர்த்திவிட்டோம், அத்தியாவசிய தேவையான பால் விலையை உயர்த்திவிட்டோம். அடுத்ததாக, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவும் அதிகாரிகள் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு ஏழைகள் எப்படி சிரிப்பார்கள் ஸ்டாலின் அவர்களே?

பூரண மதுவிலக்கு, குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் இதெல்லாம் தந்திருந்தால்கூட ஒருவேளை, ஏழைகள் சிரித்திருப்பார்கள். கிராமங்களில் இரட்டைக்குவளை முறை இன்னமும் இருக்கிறது. சுடுகாட்டுப் பிரச்சினை இருக்கிறது. ஆணவக்கொலைகள் அகலவில்லை. ஆணவக்கொலைகளை தடுக்க சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை.

எதிர்க்கட்சியாக இருந்த போது எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த திமுக, தற்போது அதை செயல்படுத்த முனைகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்காக அங்குள்ள மக்களை காலிசெய்ய முனைகிறது திமுக அரசு. இதிலெல்லாம் பெரும்பாலும் பாதிக்கப்படுவது ஏழைகள் என்கிறபோது அவர்கள் முகத்தில் சிரிப்பு எப்படி வரும் முதல்வரே? 

ஏழைகளுக்கு முதல்வரிடம் கேட்க இத்தனை கேள்விகள் இருந்தாலும், ‘’கலைஞர் வழியில் செயல்படும் திமுக அரசு ஏழைகளின் நலன் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறது. மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் என அனைத்துத் தரப்பினருமே திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்துவருகிறார்கள். கடந்த ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் கடுமையான நிதிச்சுமையில் தத்தளிக்கிறோம். அதனால் தான் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது. மெல்ல மெல்ல நிதிநிலைமை சரியாகி வருவதால் கூடிய சீக்கிரமே அனைத்தும் சரியாகி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்கிறார்கள் திமுககாரர்கள்.  

அதுவரை ஏழைகளின் சிரிப்பு? 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in