
“9 நாட்களில் 8 முறை எரிபொருள் விலை உயர்ந்திருக்கிறது. இது அராஜகம். இப்படி எங்காவது நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று மத்திய அரசை சரமாரியாக விமர்சித்திருக்கிறார் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சத்ருகன் சின்ஹா.
புகழ்பெற்ற நடிகரான சத்ருகன் சின்ஹா காங்கிரஸ், பாஜக என இரண்டு தேசியக் கட்சிகளும் அங்கம் வகித்தவர். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர். பிரதமர் மோடியின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்த அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று, சில மாதங்களுக்கு முன்னர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஏப்ரல் 12-ல் ஆசன்சோல் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை அவருக்கு சீட் வழங்கியிருக்கிறது.
இந்நிலையில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்ருகன் சின்ஹா, வாஜ்பாய் அரசுடன் மோடி அரசை ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார்.
“வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஜனநாயகம் இருந்தது. ஆனால், மோடியின் ஆட்சிக்காலத்தில் சர்வாதிகாரம்தான் இருக்கிறது” என்றார். “தற்பெருமையும் ஆணவமும் கொண்ட இந்த அரசு, தன் விருப்பம் போல எதை வேண்டுமானாலும் செய்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.