கரைந்து போன `அண்ணா திராவிடர் கழகம்': சகோதரி சசிகலாவுடன் ஐக்கியமானார் சகோதரர் திவாகரன்

இணைப்பு விழாவில்
இணைப்பு விழாவில்

சசிகலாவின் தம்பி திவாகரன் தோற்றுவித்த அண்ணா திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சி நீர்க்குமிழி போல தோன்றிய வேகத்தில் அமிழ்ந்து போனது. தஞ்சையில் இன்று நடந்த விழாவில், தனது அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலாவோடு இணைத்திருக்கிறார் திவாகரன்.

சசிகலாவுடன்  திவாகரன்
சசிகலாவுடன் திவாகரன்

நடராஜன் மனைவி சசிகலாவின் சகோதரர் திவாகரன், அதிமுகவின் நிழல் மனிதராக விளங்கியவர். தனது சகோதரி சசிகலா ஜெயலலிதாவோடு நெருக்கமாக இருப்பதை பயன்படுத்தி அதிமுகவின் சக்தி மிக்க மனிதராக அவர் விளங்கினார். முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், வைத்திலிங்கம் தொடங்கி டெல்டா மாவட்டத்தில் உள்ள அத்தனை அதிமுககாரர்களையும் அவர் கையில் வைத்திருந்தார்.

அவர் கைகாட்டுகிறவர்களுக்கு அதிமுகவில் எம்எல்ஏ, எம்பி சீட்டுக்கள் வழங்கப்பட்டது. அவரால் சுட்டிக் காட்டப்படுகிறவர்களே அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதற்கு பிரதிபலனாக அவர்கள் பெற்றுக் கொண்டது ஏராளம் என்று சொல்வார்கள். இப்படி சக்தி வாய்ந்த மனிதராக இருந்தவருக்கு அதிமுகவில் சசிகலாவுக்கு இக்கட்டான நேரம் வந்தபோது அவருக்கும் கஷ்ட காலம் வந்தது.

இணைப்பு விழா
இணைப்பு விழா

அதிமுகவில் இருந்து சசிகலா ஓரம் கட்டப்பட்டதும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், சசிகலாவின் அக்காள் மகனான டி.டி.வி.தினகரனுக்கும் மோதல் ஏற்பட்டது. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். அதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு மன்னார்குடியில் திவாகரன் ‘அண்ணா திராவிட கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் பொதுச் செயலாளராக அவரே இருந்தார்.

இப்படி இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்திருந்த நிலையில் சசிகலா, திவாகரன், தினகரன் என யாரும் தமிழக அரசியலில் பெரிதாக சோபிக்க முடியாமல் போனது. சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவால் அதிமுகவை கைப்பற்ற முடியவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த தினகரனால் ஒரு எம்பி, எம்எல்ஏ சீட்டைக் கூட பிடிக்க முடியவில்லை. அண்ணா திராவிடர் கழகத்தில் உருவாக்கிய திவாகரனால் ஒரு தேர்தலிலும் வேட்பாளர்களைக் கூட முழுமையாக நிறுத்த முடியவில்லை. அவரது ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போனார்கள். திவாகரன் மட்டுமே தனித்தீவாக முடங்கினார். அவரது மகன் ஜெயானந்த், போஸ் மக்கள் இயக்கத்தை தொடங்கினார். அதுவும் பெரிதான செயல்பாடுகள் இல்லாமல் இருக்கிறது.

இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து கிடந்ததால் தங்களுடைய அரசியல் எதிர்காலம் தொலைந்து போய்விட்டது என்பதை மூவருமே தற்போது உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தங்களுக்குள் இணைந்து செயல்பட அவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள் என தெரிகிறது. அதனால்தான் முதல் கட்டமாக திவாகரன் தன்னுடைய கட்சியை சசிகலா அணியோடு இன்று இணைத்திருக்கிறார். தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற இணைப்பு விழாவில் ஆயிரம் தொண்டர்களோடு சசிகலா அணியில் தங்கள் கட்சியை இணைத்தார். அவரது மகன் ஜெயானந்தும் இதில் கலந்து கொண்டார். இதனால் தோன்றிய வேதத்தில் அமிழ்ந்து போயிருக்கிறது அண்ணா திராவிடர் கழகம். இந்த இணைப்பு தொடர்ந்து அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழத் தொடங்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in