நீண்ட ஆயுள் வேண்டி திருக்கடையூர் கோயிலில் மனைவியுடன் டி.டி.வி.தினகரன் வழிபாடு!

நீண்ட ஆயுள் வேண்டி திருக்கடையூர் கோயிலில் மனைவியுடன் டி.டி.வி.தினகரன் வழிபாடு!

60 வயது தொடங்குவதை முன்னிட்டு திருக்கடையூர் கோயிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் உக்கிரரத சாந்தி பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்  தேவாரப் பாடல் பெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இத்தலத்தில் மார்க்கண்டேயருக்காக சுவாமி, கால சம்கார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வரம் செய்ததாக புராணம் கூறுகிறது. இங்கு ஆயுள் ஹோமம் செய்து வழிபடுவதால்  நீண்ட ஆயுள்  கிடைக்கும் என்பது ஐதீகம். 

60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, முடிந்தவர்கள் சஷ்டி அப்த பூர்த்தி,  70 வயது முடிந்தவர்கள் பீமரத சாந்தி,  80 வயது முடிந்தவர்கள்  சதாபிஷேகம், 100 வயது முடிந்தவர்கள் பூர்ணாபிஷேகம் ஆகியவை இங்கு  செய்யப்படுவது வழக்கம். அப்படி பூஜைகள் செய்து இங்குள்ள சுவாமி அம்பாளை வழிபட்டால் மேலும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அமமுக  பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு இன்று 60 வயது தொடங்குவதை முன்னிட்டு அவர் பூஜைகள் செய்து வழிபடுவதற்காக இன்று காலை  திருக்கடையூருக்கு  வந்தார். தினகரனுடன்  அவரது மனைவி அனுராதா,  மகள் ஜெயஹரிணி ஆகியோர் வந்தனர்.  அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோ பூஜை, கஜ பூஜை ஆகியவை செய்தபின்னர்  64 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு  ஹோமம் நடைபெற்றது.  தினகரன் அவரது மனைவியும்  அமர வைக்கப்பட்டு உக்கிரரத சாந்தி மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. பூஜைகளுக்கு பின்னர் தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டு சுவாமி அம்பாளை வழிபட்டனர்.

பூஜைகளை கணேஷ் சிவாச்சாரியார் தலைமையிலான பதினைந்து சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். மாவட்ட செயலாளர் பாரி வள்ளல் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in