சிவகங்கையில் டிடிவி தினகரன்... தேனியில் மகனுக்குப் பதிலாக ஓபிஎஸ் போட்டியிட திட்டம்!

ஓபிஎஸ் - டிடிவி தினகரன்
ஓபிஎஸ் - டிடிவி தினகரன்

இம்முறை மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என முன்பு அறிவித்த டிடிவி தினகரன், பிற்பாடு தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

லேட்டஸ்டாக, “தொண்டர்கள், நண்பர்கள் விரும்பினால் போட்டியிடுவேன்” எனச் சொல்லி இருக்கிறார் தினகரன். பாஜக கூட்டணியில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ள நிலையில், தினகரனின் அமமுகவும் அதே ரூட்டில் தான் பயணிக்கும் என்றே தெரிகிறது.

பாஜக கூட்டணியில் தங்களுக்கு 10 தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும் என தினகரன் தரப்பில் தமிழக பாஜகவிடம் பேசி இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் 10 தொகுதிகளில் சிவகங்கை, தேனி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளும் வருகின்றன. சிவகங்கை, தேனி இரண்டு தொகுதிகளையும் தங்களுக்காக கேட்டிருந்தாலும் இரண்டில் ஒன்றை மட்டுமே கடைசி நேரத்தில் தினகரன் டிக் அடிப்பார் என்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

அநேகமாக அவரது சாய்ஸ் சிவகங்கை என்பதே இப்போதைய நிலவரம். சிவகங்கை தொகுதியில் கடந்த முறை அமமுக வேட்பாளராக தனித்துப் போட்டியிட்ட தேர்போகி பாண்டி, சுமார் 1 லட்சத்து 22 ஆயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். அமமுகவுக்கு இருக்கும் இந்த வலுவான ஓட்டு வங்கியை நம்பித்தான் சிவகங்கையை குறிவைக்கிறார் தினகரன்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து வெளிப்படையாக அறிவிக்காத போதே இந்தத் தொகுதிக்குள் செயல்வீரர் கூட்டங்களை நடத்தி தொண்டர்களை தேர்தலுக்குத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறார் தினகரன். இங்கு பாஜக கூட்டணி வேட்பாளர் தினகரன் தான் என்பதை பல மாதங்களுக்கு முன்பே தங்களிடம் அண்ணாமலை உறுதிப்படுத்திவிட்டதாக பாஜக தரப்பிலும் சொல்கிறார்கள்.

தினகரனுடன் தேர்போகி பாண்டி...
தினகரனுடன் தேர்போகி பாண்டி...

தினகரன் எப்படி சிவகங்கையை தனக்காக தயார்படுத்துகிறாரோ அதுபோல ஓபிஎஸ்சும் தேனியை தனக்காக தயார்படுத்துகிறார். தற்போது தேனி எம்பி-யாக இருக்கும் ரவீந்திரநாத் குமாருக்கு பெயர் கெட்டுக் கிடப்பதால் இம்முறை அவர் களத்துக்கு வரமாட்டார் என்கிறார்கள். அதற்குப் பதிலாக, மத்திய அமைச்சர் கனவில் இருக்கும் ஓபிஎஸ் தேனி தொகுதியில் தானே நேரடியாக களமிறங்குவார் என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in