திமுக அரசின் சார்பில் இதைச் செய்யவேண்டியதில்லை! - சீறும் செந்தில்குமார் எம்.பி.,

செந்தில்குமார் எம்.பி.,
செந்தில்குமார் எம்.பி.,

இந்து பண்டிகைகளுக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதில்லை என்று இந்து அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. முதல்வரின் படம் தாங்கி இந்த வாழ்த்துச் செய்தி வெளியானது பெரும் சர்ச்சையானது.

வாழ்த்து கூறாத முதல்வருக்கு இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அறநிலையத்துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதற்கு திமுகவிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியது. தருமபுரி தொகுதி திமுக எம்பி-யான செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் நிலையில் இதுகுறித்து அவரிடம் பேசினோம். இனி அவரது பேட்டி.

அறநிலையத்துறையின் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டற்கு நீங்கள் கண்டனம் தெரிவித்தது ஏன்?

கடவுள் மறுப்பு என்பது திமுகவின் கொள்கை. அது அண்ணா காலத்திலும், கலைஞர் காலத்திலும் கடைபிடிக்கப்பட்டு தற்போதும் தொடர்கிறது. அதுவே திமுகவின் வெற்றிக்கான காரணியாகவும் நான் பார்க்கிறேன். அதில் நாம் எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. அப்படி இருக்கும்போது பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வது, விழாக்கள் கொண்டாடுவது என்பது தேவையில்லாதது. அதைச்செய்ய வேறு அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் அதைச் செய்வார்கள்.

அரசின் சார்பில் அதுவும் திமுக அரசின் சார்பில் இதைச் செய்ய வேண்டியது இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு. அறநிலைத்துறை என்பது அந்த துறையின் கீழ் இருக்கிற சொத்துகளை பாதுகாக்கவும், கண்காணிக்கவுமே இருக்கிறது. அதைச் செய்தால் போதும். அதைத் தவிர விழாக்கள் நடத்த வேண்டிய அவசியமும், வாழ்த்துச் சொல்ல வேண்டிய அவசியமும் அறநிலையத்துறைக்கு இல்லை.

கடந்த முறை திமுக ஆட்சியில் கோயில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆன்மிக சடங்குகளைச் செய்தார். மறுநாள் அவரை அழைத்து அதையெல்லாம் அமைச்சராக இருப்பவர்கள் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று கலைஞர் கண்டித்தார். அவருடைய அந்த கொள்கையைத்தான் நாம் எப்போதும் கடைபிடிக்க வேண்டும்.
அறநிலைத்துறை சார்பில் வாழ்த்து தெரிவித்தது தவறு என்றால் அதை முதல்வர் ஸ்டாலின் கண்டித்திருப்பாரே..?

அவர் கண்டித்திருக்கலாம். பொதுவெளியில் அதுபற்றி தெரியவில்லை. கலைஞரும்கூட தனிப்பட்ட முறையில் அழைத்துத்தான் கண்டித்தார். தற்போதும் அதுபோல நடந்திருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னுடைய நியாயமான கோபத்தை நான் வெளிப்படுத்தினேன். பெரியாரை போற்றுகின்ற நாம் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

முன்பு, அரசு விழாவில் பூஜை செய்ததற்கு நீங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதை கண்டித்திருக்கிறீர்கள். இவ்வளவு கோபம் தேவைதானா?

நான் அரசு விழாக்களில் கலந்துகொள்ளும்போது இதுவெல்லாம் தேவையில்லை, இப்படி செய்யக்கூடாது என்று ஒரு முறை, இரு முறை அல்ல பல முறை சொல்லியிருக்கிறேன். கூட்டணி கட்சியினர் மற்ற அமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் வேறு வழியில்லாமல் அவற்றில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், நான் மட்டும் கலந்துகொள்கிற விழாக்களில் திரும்பத் திரும்ப அதை செய்கிறபோது கோபம் வந்து அதை கண்டிக்க வேண்டியதாயிற்று.

உங்கள் கட்சியின் பிற அமைச்சர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் அதில் எல்லாம் கலந்துகொள்கிறார்களே... அதுபற்றி எதுவும் சொல்வதில்லையே?

மற்றவர்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அமைதியாக நடந்து கொள்ளலாம். அவர்களுக்கு அதற்கான கட்டாயம் இருக்கும். எனக்கு அப்படிப்பட்ட அவசியம் எதுவும் இல்லை. இதுவே மற்றவர்கள் வீடியோ கேமராக்களை ஆஃப் செய்துவிட்டு கலந்து கொள்வார்கள். நமக்கு அப்படி எந்தத் தேவையும் இல்லை.

ஆன்மிக விஷயங்களில் திமுக அமைதி காத்தும் வரும் சூழலில் நீங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறீர்களே..?

திமுகவில் இருப்பவர்கள் 90 சதவீதம் பேர் கடவுள் ஏற்பாளர்கள் தான். அவர்கள் மதம் சார்ந்து இருக்கிறார்கள். அதில் எந்தத் தவறும் கிடையாது. தலைவர் வீட்டில் இருந்து கோயிலுக்கு போகிறார்கள் என்றால் அது அவர்கள் உரிமை. அதையே அரசின் சார்பில் செய்தால் தான் அது தவறு. தனிப்பட்ட முறையில் கோயிலுக்குச் செல்வது அவர்களின் உரிமை.

ஒரு அரசின் துறை சார்பில் அரசாங்கத்தின் சார்பில் அவற்றை செய்வது தவறு என்று தான் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் அதுதான் அரசின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. அண்ணா காலத்தில் அரசாங்க கட்டிடங்களில மத அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று அரசாணை இருக்கிறது. அதேபோல கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும் அவர்கள் இதை வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.

அரசு விஷயங்களில் மதச்சார்பின்மை என்பதில் நமது முதல்வர் உள்ளிட்டவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் தான் எந்த பண்டிகைக்கும் வாழ்த்துத் தெரிவிக்காமல் கொள்கையை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள். அந்த வழியில்தான் நானும் செயல்படுகிறேன் இனிமேலும் செயல்படுவேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in