ஜிப்மர் விழாவில் ஒலித்த தன்வந்திரி வாழ்த்து பாடல்... தவிர்க்கப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து: தமிழிசை காட்டிய அதிரடி

ஜிப்மர் விழாவில் ஒலித்த தன்வந்திரி வாழ்த்து பாடல்... தவிர்க்கப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து: தமிழிசை காட்டிய அதிரடி

ஜிப்மர் வளாகத்தில் நடந்த விழாவில் தன்வந்திரி வாழ்த்து பாடல் மட்டுமே பாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை தலையீட்டால் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் 65.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியினை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, அங்குள்ள அப்துல் கலாம் கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று, சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைத்து அர்பணித்தார். விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, எம்பிக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் தொடக்கத்தில் தன்வந்திரி வாழ்த்து பாடல் மட்டும் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிகழ்ச்சியின் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘‘ஜிப்மரில் நடந்த விழாவில் தன்வந்திரி வாழ்த்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், பாடவில்லை. இதுகுறித்து கேட்டபோது நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை என்றார்கள். ஆனால், எல்லா விழாக்களிலும் நம்முடைய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் இருக்க வேண்டும்.

நாம் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதை போல் தமிழுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கோரிக்கையாக வைத்தேன். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இனி ஜிப்மரில் உள்ள எல்லா கூட்டங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவிர்த்து விடக்கூடாது என்று சிறிது காலதாமதம் ஆனாலும் கூட தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்க சொன்னேன். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்காமல் எந்த நிறுவனமும் இருக்காது என்று எங்களுடைய ஆளுமைக்கு உட்பட்டு உறுதி அளிக்கிறேன்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in