
தருமபுர ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் தொடக்கப்பட்ட சண்முகதேசிகசுவாமிகள் இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனம் சார்பாக இலவச மருத்துவமனை அமைக்க, ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் இடம் வழங்கப்பட்டு, 1951 ஜூலை மாதம், அப்போதைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராஜாவால் திறந்து வைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, பலருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளது.
பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த மருத்துவமனை, இலவச மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக, மருத்துவமனை கட்டிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது.
நகராட்சியும், மருத்துவமனையை புனரமைக்காத சூழலில், கடந்த 2019 அக்டோபர் மாதம், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி குப்பைகளைத் தரம் பிரிக்க, புதிய நுண்ணுயிர் கிடங்கை இந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்தது. தற்போது நுண்ணுயிர் கிடங்கும் செயல்படாமல், குப்பைகள் குவிந்து அப்பகுதியே சுகாதாரச் சீர்கேடாக காணப்படுகிறது.
தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே பராமரித்து நடத்த வேண்டும் என நகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், நகராட்சி சார்பில் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது நகராட்சி, அந்தக் கட்டிடத்தை இடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இதுதொடர்பாக தருமபுர ஆதீனம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், ‘’திருக்கயிலாய பராமரிப்பு தருமையாதீன 24வது குருமணிகள் தம் தாயார் நினைவாக மகப்பேறு மருத்துவமனை ஆளுநரால் தொடங்கப்பெற்று 25வது குருமணிகள் காலத்தில் மாநில முதல்வர் குமாரசாமிராஜாவால் திறந்து வைக்கப்பெற்றது. இதில் ஜெர்மனிய மருத்துவர் பல்லாண்டு காலம் இருந்து பலருக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பெற்றது.
இதை நாம் ஆதீனபராமரிப்பில் நடத்த நகராட்சிக்கு எழுதியும் பதில்வராத பொழுதே, அதை இடிக்கபோவதாக செய்தி வந்துகொண்டுள்ளது. அப்படியொரு நிகழ்வு ஏற்படுமாயின் நம்முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரைஉண்ணாவிரதம் இருந்து காப்போம்’’ என பதிவிட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.