தேவகோட்டை கலாட்டா எதிரொலி: கார்த்தி சிதம்பரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க பரிந்துரை!

தேவகோட்டை கலாட்டா எதிரொலி: கார்த்தி சிதம்பரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க பரிந்துரை!

நேற்று (செப்.25) தேவகோட்டையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி-யை எதிர்த்து காங்கிரஸார் கேள்வி எழுப்பியதும் அதையொட்டி நடந்த அடிதடி ரகளையும் வீடியோ ஆதாரங்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் கூட்டத்தில் கலவரம் என்றதும் டெல்லியிலிருந்தே தகவல்களைக் கேட்டுப் பெற்றதாகச் சொல்கிறார்கள். மாநில தலைமையும் இந்த கலாட்டா குறித்த தரவுகளை சேகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தச் சூழலில் கார்த்திக்கும் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடிக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உளவுத்துறை அறிக்கை அனுப்பி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸாருக்குள் நடந்த ரத்தக்களரி மோதல் தொடர்பாக கார்த்தி தெரிவித்த கருத்தும் இப்போது சர்ச்சையாகி வருகிறது. கலவரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் நடந்திருப்பது கட்சி உயிரோட்டமாக உள்ளதை உணர்த்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் எப்போதுமே பதவிக்கு போட்டி கடுமையாகத்தான் இருக்கும். கட்சியின் மூத்த தலைவர்களை புறக்கணிப் பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு சிவகங்கையில் மட்டுமில்லை... அகில இந்திய அளவிலேயே உள்ளது. எனினும் 125 வருட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சி இன்னும் 125 ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாகவே இருக்கும்” என்று சொன்னார்.

தேவகோட்டை சம்பவத்தில் கார்த்தியிடம் கேள்வி எழுப்பிய கே.ஆர்.ராமசாமியின் ஆதரவாளர்கள் சிலர், தங்களை பொறுப்பிலிருந்து நீக்கியதற்கான காரணத்தையும் கேட்டனர். அதற்கு காரசாரமாகவே பதில் சொன்னார் கார்த்தி. இந்த நிலையில், “மூத்த தலைவர்கள் புறக்கணிப்படுவதாக சொல்லப்டும் குற்றச்சாட்டு அகில இந்திய அளவிலேயே உள்ளது என்று அகில இந்திய தலைமையையே கார்த்தி விமர்சனம் செய்திருக்கிறார்” என்றும் சிலர் கொதிக்கிறார்கள்.

மாங்குடி எம்.எல்.ஏ
மாங்குடி எம்.எல்.ஏ

இதனிடையே கார்த்தியின் பேட்டிக்கு தனது முகநூல் பக்கத்தில் பதில் சொல்லி இருக்கும் சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஒய்.பழனியப்பன், ‘125 ஆண்டுகள் கடந்தும் காங்கிரஸ் பேரியக்கம் உயிரோட்டமாக இருக்கிறது . நிர்வாகிகளிடையே சில வாக்குவாதங்கள் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு தான் எல்லாம் சரியாகிவிடும் . இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் புத்துணர்வுடன் பேரியக்கத்தின் செயல்பாடுகள் இருக்கும் - மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் எம்பி அவர்களின் இந்தக் கூற்றை நானும் மனதார வரவேற்கிறேன்.

பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியில் தொண்டர்கள் துவண்டு போய் இருக்கிறார்கள். வட்டார தலைவர்கள் வறட்சியில் வழி தெரியாமல் இருக்கிறார்கள். கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும். மோடியின் சர்வாதிகாரம், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்டவைகளை சிவகங்கை மாவட்டத்தில் தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஒய்.பழனியப்பன்
ஒய்.பழனியப்பன்

அன்புத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்ட மாவட்ட தலைவரை நம் எம்.பி.வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் அனைத்துப் பிரச்சினை களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.

இந்தச் சூழலில், தேவகோட்டை கலவரத்தின் போது கார்த்தி சிதம்பரத்தின் தனியார் செக்யூரிட்டி ஆட்களும் விரட்டப்பட்டதால் கார்த்திக்கும் காரைக்குடி காங்கிரஸ் எம்எல்ஏ-வான மாங்குடிக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உளவுத்துறை அறிவுறுத்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் காரைக்குடியில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இன்று மாலை 7.20 மணிக்கு கார்த்தியும் மாங்குடியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கவிருக்கிறார்கள். அப்போது, தேவகோட்டை கலாட்டா குறித்து இருவரும் விளக்கமளிப்பதுடன், கார்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in