தேவகோட்டை காங்கிரஸ் கூட்டத்தில் ரகளை: கார்த்தி சிதம்பரத்துக்கு குறியா?

தேவகோட்டை காங்கிரஸ் கூட்டத்தில் ரகளை: கார்த்தி சிதம்பரத்துக்கு குறியா?

சிவகங்கை மாவட்ட காங்கிரஸில் கார்த்தி சிதம்பரத்துக்கும் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையில் அரசல்புரசலாய் இருந்த பனிப்போர் அடிதடி மோதலாய் வெடித்திருக்கிறது.

கடந்த முறை காரைக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற கே.ஆர்.ராமசாமி இம்முறை தனது மகன் கருமாணிக்கத்துக்காக திருவாடானை தொகுதியை வாங்கிக் கொண்டு அந்தப் பக்கம் போய்விட்டார். இப்போது காரைக்குடி தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தின் விசுவாசி மாங்குடி எம்எல்ஏ-வாக இருக்கிறார். திருவாடானை தொகுதிக்குப் போய்விட்டாலும் சிவகங்கை மாவட்ட அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைக்கும் கே.ஆர்.ராமசாமி, காரைக்குடி தொகுதியிலும் தனது அதிகாரத்தை விடாமல் நிலைநாட்டி வருகிறார்.

இதனால், காரைக்குடி தொகுதிக்குள் வரும் தேவகோட்டை நகர் பகுதியில் கார்த்தி விசுவாசிகளால் ராமசாமியை மீறி எதையும் செய்யமுடியாத சூழல். இருந்தபோதும் ராமசாமி தன்னை மீறுவதை விரும்பாத கார்த்தி சிதம்பரம், வாரத்தில் இரண்டு நாட்கள் தேவகோட்டை நகர காங்கிரஸ் அலுவலகம் சென்று பொதுமக்களிடம் மனு வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளும்படி மாங்குடி எம்எம்ஏ-வுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

அதன்படி செவ்வாயும் சனியும் தேவகோட்டை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார் மாங்குடி. இன்றும் அப்படி மனு வாங்கச் சென்றிருக்கிறார். இதனிடையே, நோய்வாய்ப்பட்டு இறந்த மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கோவிந்தன் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக கார்த்தி சிதம்பரமும் இன்று தேவகோட்டை சென்றார். கோவிந்தன் வீட்டில் துக்கம் விசாரித்துவிட்டு அவரும் மாங்குடியுடன் காங்கிரஸ் அலுவலகத்துக்குச் சென்றார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் கே.ஆர்.ராமசாமியின் ஆதரவாளர்களும் கார்த்தி விசுவாசிகளும் சரிக்குச் சரியாக திரண்டிருந்த நிலையில், கே.ஆர்.ராமசாமியும் அங்கு இருந்தார். அப்போது “தேவகோட்டைக்கு எம்.பி வருவது பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப் படவில்லை” என ராமசாமியின் ஆதரவாளர்கள் பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் கார்த்தி ஆதரவு வட்டார தலைவரான சஞ்சய் மீது இருந்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “இந்தப் பகுதி விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு எப்ப வாங்கித் தருவீங்க?” என்று கார்த்தியைப் பார்த்து சிலர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு கார்த்தி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஆவேசமாக எழுந்த இன்னொருவர், “ஓட்டு வாங்கிட்டுப் போனதோட சரி. நன்றி சொல்லக்கூட இன்னும் நீங்க வரல” என கத்தினாராம். அவருக்கு சற்று கோபமாகவே கார்த்தி பதில் சொல்ல, “நீங்க எங்க அய்யா (கே.ஆர்.ராமசாமி) கிட்ட மன்னிப்புக் கேட்கணும்” என்று பதிலுக்கு அந்த நபர் சூடானாராம். இதனால் மேலும் ஆவேசமான கார்த்தி, “யாருய்யா அந்த அய்யா... நீ யாருன்னு எனக்குத் தெரியும் உன்னைய நான் சும்மா விடமாட்டேன்” என்று எகிறியதாகச் சொல்கிறார்கள்.

இதற்குள்ளாக கார்த்தி ஆதரவு வட்டார தலைவர் சஞ்சய் மீது ஒரு கும்பல் சேர்களை எடுத்து வீச, அவர் தலைதப்பி ஓடியிருக்கிறார். விட்டால் கார்த்தி மீதும் கைவைத்துவிடுவார்களோ என அஞ்சிய கே.ஆர்.ராமசாமி, கார்த்தியை தனி அறைக்குள் கொண்டுபோய் உட்காரவைத்து கதவைச் சாத்தி இருக்கிறார். அப்போது அவரிடமும் தனது கோபத்தைக் காட்டிய கார்த்தி, “நீங்கள் நினைத்திருந்தால் இப்படியெல்லாம் நடக்காமல் தடுத்திருக்கலாம்” என்றாராம். பதிலுக்கு ராமசாமியும், “நீங்க பேச்சை வளர விட்டுட்டீங்க. நான் எப்படி சரி பண்றது” என்று சொல்லி இருக்கிறார்.

இந்தக் களேபரங்களைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் இருந்த அனைவரையும் அங்கிருந்து வெளியேறச் சொன்ன ராமசாமி, கூட்டம் குறைந்த பிறகு கார்த்தியை அங்கிருந்து பத்திரமாக சிவகங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய கே.ஆர்.ராமசாமியின் விசுவாசிகள், “அமைதியாக இருந்த ஊரை கார்த்தி விசுவாசிகள் கலவரப்படுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவகோட்டையில் நடக்கும் காங்கிரஸ் நிகழ்ச்சிகளுக்கு எங்கள் தரப்பு வட்டார தலைவர்களுக்குக்கூட தகவல் தராமல் ஒரு குரூப் திட்டம் போட்டு செயல்படுறாங்க. இதனால தேவகோட்டையில் காங்கிரஸ் நிகழ்ச்சிகள் ரெண்டு ரெண்டா நடக்குது. இதையெல்லாம் கண்டிக்காம கார்த்தி ஊக்குவிக்கிறார்.

இன்னைக்கிக்கூட தேவகோட்டை பகுதியில உருவாட்டிக்கும், உஞ்சனைக்கும் எம்எல்ஏ மாங்குடி போயிருக்கார். ஆனா, இங்குள்ள வட்டார தலைவர்களுக்குக்கூட தகவல் சொல்லல. இப்படியே வளரவிட்டுத்தான் இன்னைக்கி அடிதடியில வந்து நிக்கிது. ஆனா, இது இத்தோட நிக்காது. இனிமேல், மாங்குடியோ கார்த்தியோ பழைய மாதிரி இந்தப் பக்கம் வந்து போறது கஷ்டம் தான்” என்றார்கள்.

கார்த்தி தரப்போ, “காரைக்குடிக்கு இப்ப மாங்குடி தான் எம்எல்ஏ. ஆனா, அந்த அதிகாரத்த விட்டுக்குடுக்க கே.ஆர்.ராமசாமி ஆளுங்களுக்கு மனசு வரல. அதனால ஆரம்பத்துல இருந்தே அவங்க தான் ரெட்டைக் காவடி தூக்குறாங்க. காரைக்குடி தொகுதியில மட்டுமில்லாம மாவட்டம் முழுக்கவே கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக தனது அதிகார வரம்பை விஸ்தரிக்க நினைக்கிறார் ராமசாமி. இவர்களுடைய எண்ணமெல்லாம் கார்த்தி சிதம்பரத்தை எப்படியாவது ஓரங்கட்டிவிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதற்காக பல முனைகளிலும் பலவாறாக வேலை செய்கிறார்கள். மாவட்ட கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ராமசாமியே கடிதம் கொடுத்திருப்பதைக்கூட அந்தத் திட்டத்தின் வெளிப்பாடாகவே பார்கிறோம். ராமசாமி லேசா ஒரு பார்வை பார்த்தாலே யாரா இருந்தாலும் அமைதியாகிருவாங்க. ஆனால், இன்னைக்கி அவர் முன்னாடியே இம்புட்டுக் கலாட்டா நடந்திருக்குன்னா என்ன அர்த்தம்? இவர்கள் கேட்பதற்காக மாவட்ட கமிட்டி கூட்டத்தைக் கூட்டினால் அங்கேயும் சிலர் ஏடாகூடமாகப் பேசி கலவரத்தை இழுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்றார்கள்.

எது எப்படியோ, சிவகங்கை காங்கிரஸில் அண்மைக்காலமாக நடக்கும் நிகழ்வுகள் எதுவும் நல்ல சமிக்ஞையாக தெரியவில்லை.

Related Stories

No stories found.