30 சென்டிமீட்டர் மழை பெய்தும் சென்னையில் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

30 சென்டிமீட்டர் மழை பெய்தும் சென்னையில் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"சென்னையில் 30 சென்டிமீட்டர் அளவுக்கான மழை பெய்தும்கூட பாதிப்பு என்பது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை அசோக்நகரில் மழை நீர் தேங்கியிருந்த இடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அப்போது, தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஆறு மாத காலத்திலேயே 220 கிலோ மீட்டரில் 157 கிலோ மீட்டர் நீளத்துக்கான மழை நீர் வடிகால்வாய் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் 700 இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இன்று முற்றிலுமாக குறைந்து 40 என்கின்ற அளவில் குறைந்து இருக்கிறது. 30 சென்டிமீட்டர் அளவுக்கான மழை பெய்தும்கூட பாதிப்பு என்பது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கும் போதே அரை மணி நேரத்தில் கால்வாய்களில் நீர் வடிந்து விடும். அதை தவிர்த்து பெரிய அளவில் பாதிப்பு சென்னையில் இல்லை" என்றார்.

இதனிடையே மழைநீர் பாதிப்பு குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in