தமிழிசை ஏன் அப்படி பேசினார்? ஜனாதிபதி பதவிக்கு குறியா?

அந்த சர்ச்சைக்குரிய உரையை தமிழிசை நிகழ்த்திய போது...
அந்த சர்ச்சைக்குரிய உரையை தமிழிசை நிகழ்த்திய போது...

சென்னையில் நடந்த யூடியூப் சேனல் ஒன்றின் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது சர்ச்சையாகியிருக்கிறது. அந்த விழாவில் பேசிய அவர், "ஆளுநர் என்றாலே அரசியல் பேசக்கூடாது. அரசியலில் ஆளுநர்களின் எந்தத் தலையீடும் இருக்கக்கூடாது என்ற குரல்கள் ஓங்கிஒலிக்கிறது. நான் அரசியல்வாதியாக இருந்து ஆளுநரானவர். அதனால்தான் என்னை ஆளுநர் என்று அறிவித்தவுடனேயே முதல் எழுப்புக்குரல் தெலங்கானா முதல் அமைச்சரிடம் இருந்தே வந்தது. அரசியல்வாதிகள் ஆளுநர்களாக ஆகக்கூடாது என்று விமர்சனம் வைக்கப்பட்டது. நான் சொன்னேன், பெரும்பாலும் அரசியல்வாதிகள்தான் ஆளுநர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆளுநர் ஆனதற்குப் பின்பு அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் இதன் அர்த்தமே தவிர, ஆளுநர்கள் அரசியல்வாதிகளாக இல்லாமல் இருக்க முடியாது என்று நான் பதில் கருத்துச் சொன்னேன்.

ஆளுநராகவும் இருக்க வேண்டும் அரசியலும் பேசக்கூடாது. எனவே, நான் அரசியல் இல்லாமல் அரசியல் பேசுகிறேன்'' என்று தொடங்கிய தமிழிசை சௌந்தரராஜன், எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தன் அம்மாவை வீட்டுக்குக் கூப்பிட்டார். என்ன சொல்லிக் கூப்பிட்டார் என்றால், எனக்கு சம்பளம் உயரப் போகுது. மாசம் உங்க செலவுக்கு ஆயிரம் ரூபாய் தந்திடுறேன் என்று சொல்லி, அம்மாவை கூப்பிட்டார். அம்மா வந்தபிறகு என்ன சொன்னார், அம்மா என்னோட சம்பளம் உயரல. இப்ப இருக்கிற நிதிநிலைமையில உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது. அப்படியும் சொல்கிறார்கள். நிதி நிலைமையைத் தெரிந்துகொண்டுதான், அவர் அம்மாவை கூப்பிட்டிருக்க வேண்டும். கொடுக்க முடியாது என்றால் அந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கக் கூடாது. ஒன்றை வேண்டும் என்று சொல்வது போலவே, வேண்டாம் என்று சொல்வதும் கருத்துரிமைதான். உங்களுக்கு வேண்டாம் என்று சொல்ல உரிமை இருப்பது போல ஒருவர் எனக்கு வேண்டும் என்று சொல்வதற்கும் உரிமை இருக்கிறது என்று ஏன் நினைக்க மறுக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் இவர்கள் வேண்டாம் என்று சொல்வதை நான் வேண்டும் என்று சொல்லிவிட்டேன் என்றால், அவ்வளவுதான். போட்டு 'ட்ரால்' பண்ணி கிழிகிழியென்று கிழித்துவிடுவார்கள்" என்று பேசினார்.

2019 செப்டம்பரிலேயே அவர் தெலங்கானா ஆளுநராகிவிட்டார் என்றாலும்கூட, தமிழ்நாட்டில் பொதுநிகழ்ச்சியில் அவர் அரசியல் பேசியதில்லை. இப்போது புதிதாக அவர் அரசியல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் 'காமதேனு' இணையத்திடம் கூறுகையில், "பாஜக மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தாங்கள் ஆளாத மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை வைத்து குழப்பம் செய்வதையே வேலையாக வைத்திருக்கிறது. ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டிய ஆளுநர் பதவியை மிகப்பெரிய அதிகாரம் உள்ள பதவியாகக் கருதிச் செயல்படும்படியும், மாமியார் மருமகள் சண்டை போல அந்தந்த மாநில முதல்வர்களுக்கு சவால்விடுமளவுக்கு ஏறுக்குமாறாய் செயல்படும்படியும் அறிவுத்தியிருக்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தில் கூறியிருப்பதற்கு மாறாக, ஆளுநர்கள் செயல்படுவதற்குக் காரணம் ஒன்றிய அரசுதான்.

கிரண்பேடி, பன்வாரிலால் புரோகித், ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்களுடன் ஒப்பிடுகையில் தமிழிசை சௌந்தரராஜன் ஓரளவுக்கு அரசியல் நாகரீகம்கொண்ட தலைவராகத்தான் இருந்தார். காரணம், அவர் பிறப்பால் ஒரு திராவிடர். ஆனால், இப்போது அவர் செயல்படும் விதத்தையும், நேற்றைய நிகழ்வில் அவர் பேசிய பேச்சையும் நடந்துகொண்ட முறையையும் பார்க்கிறபோது ஜனாதிபதி பதவிக்கான பட்டியலில் தன்னுடைய பெயரும் இடம்பெற வேண்டும், அந்தப் பதவியைத் தீர்மானிக்கிற ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே இப்படி எல்லாம் பேசுகிறார் என்று தோன்றுகிறது. என்னை அந்தப் பதவியில் உட்கார வையுங்கள். நான் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்குவேன் என்று காட்டிக்கொள்ளவே அவர் இப்படிப் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in