முதல்வர் ஸ்டாலின் இழிவாக சித்தரிப்பு: கட்டெறும்பு பி.ஜே.பி ட்விட்டர் கணக்கை முடக்க திமுக புகார்

முதல்வர் ஸ்டாலின் இழிவாக சித்தரிப்பு: கட்டெறும்பு பி.ஜே.பி ட்விட்டர் கணக்கை முடக்க திமுக புகார்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க நிர்வாகி ஒருவர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(35). இவர் திமுகவில் சென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழிற்நுட்பப் பிரிவு அணியின் துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் இன்று அசோக் நகர் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தான் தகவல் தொழிற்நுட்பப் பிரிவில் பொறுப்பு வகித்து வரும் நிலையில் முகநூல், ட்விட்டர், இஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும், இன்று காலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ட்விட்டர் பக்கத்தை பார்த்துக்கொண்டிருந்த போது கட்டெறும்பு- பி.ஜே.பி என்ற ட்விட்டர் கணக்கில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோரின் இழிவாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய காணொலியுடன் இணைந்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பதிவைக் கண்டு தாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், இதனால் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். பின்னர் கட்சியின் விதிமுறைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றும் விதமாக சட்ட ரீதியாக இதை கொண்டு செல்ல எண்ணி புகார் அளித்துள்ளதாகவும், இப்புகாரை அடிப்படையாகக் கொண்டு தமிழக முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் குறித்து இழிவாக சித்தரித்து பதிவிட்டுள்ள கட்டெறும்பு பி.ஜே.பி என்ற ட்விட்டர் கணக்கை முடக்கி, அதை பயன்படுத்தி வந்த நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இப்புகார் தொடர்பாக அசோக் நகர் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in