விரைவில் துணை முதல்வராகிறார் உதயநிதி - அமைச்சர் பொன்முடி அதிரடி!

விரைவில் துணை முதல்வராகிறார் உதயநிதி -  அமைச்சர் பொன்முடி அதிரடி!

அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்தான கேள்விக்குப் பதில் அளித்தார். அப்போது, “முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை மிகவும் தாமதமாகக் கொடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவரை முதலிலேயே அமைச்சராக்கியிருக்க வேண்டும். உதயநிதி திறமையான இளைஞர் என்பது கடந்த தேர்தலின் போதே தெரியும். அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படக் கூடியவர், சட்டமன்ற உறுப்பினராக சில காலம் பயிற்சி பெறவேண்டும் என்பதற்காகவே முதல்வர் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் காத்திருந்தார் எனத் தோன்றுகிறது. அவருக்கு எந்தத் துறை வழங்கப்பட இருக்கிறது என்பதை நாளை முதல்வர் அறிவிப்பார்.

மேலும், பல பொறுப்புகளை உதயநிதி பெறுவார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம் என நாங்கள் யாரும் சொல்லவில்லை. அவருக்கு தாமதமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் நாங்கள் சொல்லி வருகிறோம். வாரிசு அரசியல்  என்பது வழக்கமான ஒன்றுதான். வாரிசு அரசியல் செய்யக்கூடாது எனச் சட்டம் இருக்கிறதா? தற்போதுள்ள அரசியலில் பத்து சதவீதம் பேர் வாரிசுகள்தான். வாரிசு அரசியல் அனைத்துக் கட்சியிலும் உள்ள ஒன்றுதான். அது ஒன்றும் தவறில்லை. உதயநிதி துணை முதல்வராக விரைவில் பொறுப்பேற்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார் பொன்முடி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in