
இந்தியாவின் இரண்டு மூன்று கோடீஸ்வர நண்பர்கள் ஏகபோகமாக இருப்பதை உறுதிசெய்ய பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "பணமதிப்பு நீக்கம் என்பது சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அழித்து தனது 2-3 கோடீஸ்வர நண்பர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை ஏகபோகமாக்குவதை உறுதிசெய்ய ‘பே பிஎம்’ (PayPM) மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையாகும்" என்று கூறியுள்ளார். மேலும், இது "பே பிஎம்" டிஜிட்டல் பேமெண்ட் தளமான ’பே டிஎம்’ க்காக (PayTM) செய்ததிட்டமிட்ட நடவடிக்கை என்று கூறினார்.
பாஜக ஆளும் மத்திய அரசையும், மாநிலங்களையும் அதன் ஆட்சியில் ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டுவதற்காக காங்கிரஸ் அடிக்கடி 'PayCM' மற்றும் 'PayPM' வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில்தான், பொருளாதாரத்தில் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தைக் குறைக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்பிலான நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கையின் 6 வது ஆண்டான இன்று ராகுல்காந்தி பிரதமர் மோடியை தாக்கியுள்ளார்.
பணமதிப்பு நீக்கம் என்பது சுதந்திர இந்தியாவின் "மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை" என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை குறித்து மோடி அரசாங்கத்திடம் இருந்து வெள்ளை அறிக்கையையும் கோரியது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “2016-ம் ஆண்டு இதே நாளில், மோடி அரசு தன்னிச்சையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது. தற்போது அக்டோபர் 21 ம் தேதி நிலவரப்படி பொதுமக்களிடம் உள்ள பணத்தின் மதிப்பு 30.88 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட 72% அதிகம். எனவே இந்தியாவை டிஜிட்டல், பணமில்லா பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது" என்று தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.