பொங்கல் பரிசு திட்டத்தை உதயநிதியை கவனிக்க சொல்லுங்கள்: பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

பொங்கல்  பரிசு திட்டத்தை உதயநிதியை கவனிக்க சொல்லுங்கள்: பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

பொங்கல் பரிசு திட்டத்தில்  பரிசுப் பொருட்கள் வழங்குவதை கைவிட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் அதனை கைவிடாமல்  சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதி தலைமையில் ஒருங்கிணைத்து  செயல்படுத்த வேண்டும் என்று தமிழக  முதலமைச்சருக்கு பிஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து சென்னையில் அவர் இன்று  செய்தியாளர்களிடம் கூறுகையில், " பொங்கல் பண்டிகையை ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சிறப்பாக ஒற்றுமையோடு கொண்டாடும் உயரிய நோக்கோடு கொண்டுவரப்பட்ட பொங்கல் பரிசு  திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். 

இத்திட்டத்தை நம்பி கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஏராளமாக விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது பொங்கல் பரிசுத் திட்டத்தை கைவிட்டு குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க போவதாக ஆதாரமற்ற செய்தி உலா வந்து கொண்டிருப்பதால், விவசாயிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமே தவிர மாறாக அந்த திட்டத்தையே நிறுத்திடுதல் கூடாது.  மக்கள் பயன்பாட்டினைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் நலனை முன்னிறுத்தி தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கிற சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் உதயநிதியின்  துறையின் கீழ் கூட்டுறவு, வேளாண், உணவு ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து  விரைந்து செயல்படுத்திட முன்வர வேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மட்டுமே நேரடியாக இடைத்தரகர்கள் இன்றி  கொள்முதல் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்த வேண்டும். இது குறித்து நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில்  உரிய முடிவெடுத்து பொங்கல் பரிசுத் திட்டத்தை கைவிடாமல் செயல்படுத்த முன்வர வேண்டும்" என்றார் பி.ஆர். பாண்டியன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in