கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சித் தலைவர்கள்... டில்லி பேரணியில் 27 கட்சிகள் பங்கேற்பு

தயாராகும் ராம்லீலா மைதான மேடை
தயாராகும் ராம்லீலா மைதான மேடை

கேஜ்ரிவால் கைதுக்கு எதிரான இண்டியா கூட்டணியின் இன்றைய டெல்லி கண்டன கூட்டம் மற்றும் பேரணியில் 27 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளன. மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் புதிய நெருக்கடிகளை சந்திப்பதாக புலம்பி வருகின்றனர்.

அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கான கண்டன பதாகைகள்
அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கான கண்டன பதாகைகள்

இந்த சூழலில் இண்டியா கூட்டணி சார்பிலான பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் மற்று பேரணி இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக 27 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த பேரணியில் பங்கேற்கின்றனர். சுமார் 20 ஆயிரம் பேர் பேரணியில் திரள்வார்கள் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் டெல்லி போலீஸ் தரப்பில் இந்த எண்ணிக்கை 30 ஆயிரமாக எதிர்பார்க்கப்படுகிறது.

பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, அக்கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.

இண்டியா கூட்டணி தலைவர்கள்
இண்டியா கூட்டணி தலைவர்கள்

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, பிடிபி தலைவர் மெகபூபா, திமுகவின் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரெக் ஓ பிரையன் போன்ற தலைவர்களும் உடன் பங்கேற்கின்றனர். முன்னதாக போராட்டம் குறித்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், “இது ஒரு நபர் சார்ந்த பேரணி அல்ல. இது ஒரு கட்சியின் பேரணியும் அல்ல. 27 கட்சிகள் இதில் பங்கேற்கின்றன" தெரிவித்தார்.

இதனிடையே பேரணி ஏற்பாடுகளை ஒட்டி இன்று பேசிய ஆம் ஆத்மி தலைவர் துர்கேஷ் பதக் "போலி வழக்கில் புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளது. அவர்களுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை பாஜக ஒடுக்க விரும்புகிறது. இதனால் ஒட்டுமொத்த தேச மக்களும் கோபமடைந்துள்ளனர். அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் டெல்லி ராம்லீலா போராட்டம் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in