புதிய எம்பிக்களால் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு மெஜாரிட்டி? -டெல்லி அதிகாரிகள் மசோதா நிறைவேற்றலில் பலே வியூகம்!

மாநிலங்களவை
மாநிலங்களவை

புதிய எம்பிக்களால் மாநிலங்களவையில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளன. 5 நியமனம் மற்றும் 2 சுயேச்சை எம்பிக்களால், ’டெல்லி அரசு அதிகாரிகள் மசோதா’ நிறைவேறிவிடும் நிலை தென்படுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்பும், ஓர் அவசர சட்டத்தை இயற்றியதன் மூலம் டெல்லி அரசு அதிகாரிகளை தன் நிர்வாகத்தில் வைத்துள்ளது மத்திய அரசு. இதற்கான மசோதாவை மாநிலங்களவையில் நீர்த்துப்போகச் செய்ய டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி முயன்று வருகிறது. இதற்காக, அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், எதிர்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்தார். காங்கிரஸின் ஆதரவை பெற, எதிர்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் மிரட்டி வந்தார்.

இதில், 105 எதிர்கட்சிகள் ஆதரவு ஆம் ஆத்மிக்கு கிடைத்திருப்பதாக தெரிகிறது. இழுத்தடித்த காங்கிரஸ் கட்சியும் தற்போது, ஆம் ஆத்மிக்கு தங்கள் ஆதரவை உறுதி செய்திருக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாகக் கூடும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் முழுமனதுடன் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்றுள்ளது. இதனால் டெல்லி மசோதாவை நிறைவேற்ற, பாஜக புதிய வியூகம் வகுத்துள்ளது. ஜுலை 24 அன்று 11 எம்பிக்கள் தேர்தலுக்கு பின்னர், மாநிலங்களவையின் மாற்றத்திற்கு ஏற்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் 245. ஜுலை 24-க்கு பின் 7 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இவை, ஜம்மு-காஷ்மீர் 4, நியமன உறுப்பினர்கள் 2 மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து 1 எனக் கணக்காகிறது. எனவே, வரும் ஜுலை 24-ம் தேதிக்கு பின் மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 238 எனக் குறையும். இதன்மூலம், மாநிலங்களவையில் எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற மெஜாரிட்டியாக 120 உறுப்பினர்கள் அவசியமாகும்.

இதனிடையே, ஜுலை 24-ல் நடைபெறும் மாநிலங்களவையின் 11 எம்பிக்களுக்கான தேர்தலில், பாஜகவிற்கு கூடுதலாக ஒரு எம்பியும், காங்கிரஸுக்கு ஒரு எம்பியும் குறையும். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் எண்ணிக்கை 105 என்பதாக இருக்கும். இத்துடன் 5 நியமனம், 2 சுயேச்சைகளின் ஆதரவும் பாஜகவிற்கு கிடைக்கும். இதன்மூலம், 112 எம்பிக்கள் ஆதரவு பெறும் பாஜகவிற்கு மேலும், 11 எம்பிக்கள் ஆதரவு தேவை.

இந்நிலையில், தலா 1 வைத்துள்ளவர்களில் பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் மற்றும் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் ஆகியோரின் ஆதரவும் கிடைக்கும் என பாஜக நம்புகிறது. இந்த மூன்றுடன் தலா 9 வைத்துள்ள ஆளும் கட்சிகளான ஒடிஸாவின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவும் பாஜகவிற்கு கிடைக்கும் வாய்ப்புகள் நெருங்கி உள்ளன. இவை அனைத்தும் சேர்த்தால் பாஜகவிடம் 133 ஆதரவு எம்பிக்கள் சேர்கிறார்கள். ஒடிஸா, ஆந்திராவின் இரண்டு கட்சிகளும் டெல்லி அரசு அதிகாரிகள் மசோதாவில் தனது நிலையை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

இக்கட்சிகளின் கடைசி நேர நடவடிக்கைகளை பொறுத்தே மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படுவது இருக்கிறது. அதிலும் இவை எதிர்கட்சிகளுடன் இணைந்தால், டெல்லி அதிகாரிகள் மசோதா தோல்வியுறும். மாறாக மசோதாவை ஆதரித்தாலோ, வாக்கெடுப்பு சமயத்தில் மாநிலங்களவையிலிருந்து வெளியேறினாலோ அவை, பாஜகவுக்கு ஆதாயமாகி மசோதாவை நிறைவேறச் செய்யும். அதிலும், ஒடிஸா, ஆந்திரா கட்சிகள் வெளிநடப்பு செய்தால் மாநிலங்களவையின் மெஜாரிட்டி எண்ணிக்கை 111 எனக் குறைவும். இதன் பலனாக, கூட்டணிகள், நியமனம் மற்றும் சுயேச்சை எம்பிக்கள் மூலமாக டெல்லி மசோதாவை பாஜக எளிதில் நிறைவேற்ற வாய்ப்பாகி விடும்.

டெல்லியில் இன்று கூடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மத்தியில் இது தொடர்பான ஆலோசனையும் நடந்தேறும் எனத் தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in