15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவுரை - டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி!

15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவுரை - டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி!

15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இதுவரை 132 இடங்களை வென்றுள்ளது. 250 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி உள்ளாட்சி அமைப்பில், 126 இடங்கள் என்ற பெரும்பான்மை இடங்களை ஆம் ஆத்மி தாண்டியுள்ளது. 15 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த பாஜக 104 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் ஒன்பது வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 3 இடங்களில் சுயேட்சைகள் வென்றுள்ளனர்.

டெல்லியில் 250 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 4 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் மூன்று சிவில் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்ட பிறகு டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறுவது இதுவே முதல்முறை. 2017-ல், பாஜக 270 நகராட்சி வார்டுகளில் 181 ல் வென்றது. அந்த தேர்தலில் ஆம் ஆத்மி 48ல் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் 30 இடங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

டெல்லி மாநக்ராட்சி தேர்தல் வெற்றிக்கு பின்னர் மக்களிடம் உரையாற்றிய அர்விந்த் கேஜ்ரிவால், "முதலாவதாக, எங்களுக்கு வாக்களித்ததற்காக டெல்லி மாநகராட்சி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று, டெல்லி மக்கள் டெல்லியின் குடிமை அமைப்பின் பொறுப்பையும் எங்களுக்கு வழங்கியுள்ளனர். பள்ளிகளை மேம்படுத்தும் பொறுப்பை மக்கள் எங்களுக்கு வழங்கினர். அதை செய்தோம். மேம்பட்ட மருத்துவமனைகளை உருவாக்குவோம் என்று மக்கள் எங்களை நம்பினார்கள், நாங்களும் அதை செய்தோம். பிறகு எங்களுக்கு இலவசக் கல்வி, இலவச மின்சாரம் வேண்டும் என்று வாக்களித்தார்கள், அதையும் நாங்கள் வழங்கினோம், இப்போது நகரத்தில் உள்ள குடிமை வசதிகளுக்காக எங்களை நம்பியிருக்கிறார்கள். நான் அவர்களை கைவிடமாட்டேன்.நானும் உங்களை நேசிக்கிறேன்.கட்சியினர் அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், இப்போது நாம் வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான்.தேர்தல் முடிந்துவிட்டது, இப்போது செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். இனி அரசியல் தேவையில்லை, இப்போது நகரத்தை மேம்படுத்துவதற்கான உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் தேவை" என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in