‘என் மீது பாஜக கவுன்சிலர்கள் தாக்குதல் நடத்தினார்கள்’ - டெல்லி மேயர் காவல்துறையில் புகார்

ஷெல்லி ஓபராய்
ஷெல்லி ஓபராய்‘என் மீது பாஜக கவுன்சிலர்கள் தாக்குதல் நடத்தினார்கள்’ - டெல்லி மேயர் காவல்துறையில் புகார்

டெல்லி மாநகராட்சியில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர்களுக்கு இடையே நேற்று மோதல் வெடித்தது. இந்த நிலையில் மேயர் ஷெல்லி ஓபராய், பாஜகவைச் சேர்ந்த சில கவுன்சிலர்கள் தன் மீது உயிருக்கு ஆபத்தான தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய், தான் பாஜக கவுன்சிலர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் புகார் அளித்தார். ஆம் ஆத்மி கவுன்சிலர் ஆஷு தாக்கூரையும் மற்றொரு பாஜக கவுன்சிலர் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து உடனடியாக எந்த எதிர்வினையும் இல்லை.

முன்னதாக, மாநகராட்சி சபையை ஒத்திவைத்து, டெல்லி மாநகராட்சி (எம்சிடி) நிலைக்குழுவின் ஆறு உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் நடைபெறும் என்று டெல்லி மேயர் அறிவித்தார்.

இது தொடர்பாகப் பேசிய ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி, “ஆஷூ தாக்கூர் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சபையிலிருந்து மாநகராட்சியின் வெளியேறும் வாயில் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டார். நாங்கள் கமலா மார்க்கெட் காவல் நிலையத்திற்குச் சென்று மேயர் ஷெல்லி ஓபராய் மற்றும் எங்கள் மற்ற பெண் கவுன்சிலர்கள் மீது உயிருக்கு ஆபத்தான தாக்குதல் வழக்கு பதிவு செய்துள்ளோம். முனிசிபல் இல்லத்திற்குள் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதபோது, டெல்லியில் அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?. மூன்று பாஜக கவுன்சிலர்கள் மற்றும் பிறருக்கு எதிராக புகார் அளித்துள்ளோம். எம்சிடி தேர்தலில் பாஜக தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆட்சியில் பின் கதவு வழியாக நுழைவதற்கு வன்முறையைப் பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது" என்று கூறினார்.

டெல்லி மாநகராட்சின் நிலைக்குழுவிற்கு வெள்ளிக்கிழமை நடந்த தேர்தலில் பதிவான ஒரு வாக்கு செல்லாதது என்று மேயர் ஓபராய் அறிவித்ததை அடுத்து, பாஜக கவுன்சிலர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை முழுவதுமாக கூச்சல் குழப்பமாக மாறியது மற்றும் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவின் பல கவுன்சிலர்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் வெடித்தன. ஒரு கவுன்சிலர் மேயரின் மைக்கை சேதப்படுத்தினார்.

இதுகுறித்துப் பேசிய மேயர் ஷெல்லி ஓபராய், "நிலைக்குழு தேர்தல் முடிவை நான் அறிவிக்கும் போது, பாஜக கவுன்சிலர்கள் என் நாற்காலியை தள்ளிவிட்டு என்னை தாக்கினர். பாஜக கவுன்சிலர்கள் ரவி நேகி, அர்ஜுன் மர்வா, சந்தன் சவுத்ரி மற்றும் பலர் என் மீது உயிருக்கு ஆபத்தான தாக்குதலை நடத்தினர்" என்று குற்றம் சாட்டினார்.

வெள்ளியன்று பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் கிழிக்கப்பட்டுவிட்டன, எனவே தார்மீகப் பொறுப்பாக, நிலைக்குழுவின் ஆறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு புதிய தேர்தல் நடத்தப்படும் என்று அவர் கூறினார். இது தொடர்பாக மேயர் தனது ட்வீட்டில், "எம்சிடி சபையில் பாஜக கவுன்சிலர்கள் என் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்" என தெரிவித்தார். இந்த கோரிக்கைக்கு பதிலளித்த டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், மேயரின் புகார் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in