கோவா தேர்தலில் மதுபானக் கொள்கை ஊழல் பணம்: ஆம் ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்கோவா தேர்தலில் மதுபானக் கொள்கை ஊழல் பணம்: ஆம் ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் மூலமாக கிடைத்த பணத்தை, கோவாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், "இதுவரை நடந்த இந்த ஊழலின் தடயங்கள் பற்றிய விசாரணையில், இந்த நிதியின் ஒரு பகுதி ஆம் ஆத்மியின் கோவா தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

அமலாக்கத்துறையின் அறிக்கையின் படி, ஆம் ஆத்மியின் கணக்கெடுப்பு குழுக்களில் அங்கம் வகித்த தன்னார்வலர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது எனவும், ஆம் ஆத்மியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர், பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள சில நபர்களிடம் பணமாக பெறுமாறு கூறினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் விஜய் நாயர், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுண்டா, அரவிந்தோ பார்மா இயக்குநர் சரத் சந்திர ரெட்டி, தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா கல்வகுந்த்லா ஆகியோர் அடங்கிய குழுவிடமிருந்து ரூ.100 கோடி பணம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அபிஷேக் போயின்பல்லி, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தினேஷ் அரோராவுடன் சதி செய்து பணத்தை மாற்ற உதவினார் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பதிலளித்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இது முற்றிலும் கற்பனையானது என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in