
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.கவிதா, டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கின் விசாரணைக்காக நாளை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தற்போது கைவிடப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமச்சந்திரன் பிள்ளை நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிள்ளை, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு ஒரு நிறுவனத்தில் வழிகாட்டியாக பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தோஸ்பிரிட்ஸ் என்ற மதுபான நிறுவனத்தில் 65 சதவீத பங்குகளை வைத்திருந்ததாக கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. அதனடிப்படையில் டிசம்பர் 11, 2022 அன்று ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் விசாரணை நடத்தப்பட்டது.
அருண் ராமச்சந்திரன் பிள்ளை, அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், தெலங்கானா எம்எல்சி கே.கவிதாவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் (ஏஏபி) இடையே ஒரு ஒப்பந்தம் இருந்ததாகவும், கே கவிதா டெல்லி மதுபான வணிகத்திற்கான ஒப்புதலைப் பெற ரூ.100 கோடி பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். கவிதா, இந்த வழக்கில் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் நாயர் மற்றும் தினேஷ் அரோரா ஆகியோருடன் ஓபராய் மெய்டன்ஸில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தக் கோரி மார்ச் 10ம் தேதி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கவிதா அழைப்பு விடுத்துள்ளார்.