
மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாருக்கு அமலாக்கத்துறை வியாழக்கிழமை சம்மன் அனுப்பியது. இன்று அமலாக்கத்துறை முன் ஆஜரான அவரது வாக்குமூலங்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கேஜ்ரிவாலின் பெயர் குறிப்பிடப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையின்படி, மதுபான தொழிலதிபரும், கலால் கொள்கை ஊழலில் முதன்மை குற்றவாளியுமான சமீர் மகேந்திரு அர்விந்த் கேஜ்ரிவாலுடன் வீடியோ அழைப்பில் பேசினார் என்றும், ஆம் ஆத்மியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயரை நம்பும்படி கேஜ்ரிவால் சமீரிடம் கேட்டுக் கொண்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
விஜய் நாயர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர். டெல்லி மதுக் கொள்கை ஊழலில் சமீர் மகேந்திரு மற்றும் விஜய் நாயர் மற்றவர்களுடன் சதி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை அமலாக்கத்துறை இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து மொத்தம் 9 பேரை கைது செய்துள்ளது.