டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அமலாக்கத்துறை விசாரணை அறிக்கையில் சந்திரசேகர் ராவின் மகள் பெயர்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அமலாக்கத்துறை விசாரணை அறிக்கையில் சந்திரசேகர் ராவின் மகள் பெயர்!

டெல்லி மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அமித் அரோராவை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த ரிமாண்ட் அறிக்கையில் டிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

தெலங்கானா சட்டமேலவை உறுப்பினரும், முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா, 'சவுத் குரூப்' உறுப்பினர்களில் ஒருவராக அமலாக்கத்துறை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிமாண்ட் அறிக்கையின்படி, இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் நாயர், 'சவுத் குரூப்' என்ற குழுவிடமிருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில் ரூ.100 கோடி கிக்பேக் பெற்றுள்ளார் என கூறப்பட்டுள்ளது. விசாரணையில் கவிதாவின் பெயர் இடம் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பாக விஜய் நாயர் ஆதாயம் பெற்றுள்ளார் என கூறப்பட்டுள்ளது. சவுத் குரூப் (சரத் ரெட்டி, கே. கவிதா, மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளது) குழுவிடம் இருந்து ரூ.100 கோடி அமித் அரோரா உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா மற்றும் முன்னாள் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் இந்த ஊழலில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகளை கூறினர்.

இதனையடுத்து கவிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில், கவிதாவுக்கு எதிராக அவதூறான எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று பாஜக தலைவர்களுக்கு உத்தரவிட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கவிதா கூறியுள்ளார். பாஜக அரசின் கைகளில் அனைத்து ஏஜென்சிகளும் இருப்பதாகக் கூறிய அவர், விசாரணைக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறினார்.

பாஜக அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் தெலங்கானா முதல்வர் கேசிஆர் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக கவிதா கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in