டெல்லி திமுக அலுவலகத் திறப்பு விழாவில் மோடி பங்கேற்பாரா?

டெல்லி திமுக அலுவலகத் திறப்பு
விழாவில் மோடி பங்கேற்பாரா?
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம்.

டெல்லியில் நாளை (ஏப்ரல் 2-ம் தேதி) நடக்கும் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நாளை நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடியுடன்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.
பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.

இந்நிலையில் பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா - கலைஞர் அறிவாலய அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும் மேகேதாட்டு அணை, ஜிஎஸ்டி இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல், கச்சத்தீவு மீட்பது உள்பட 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் வழங்கினார்.

டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் இடதுசாரி கட்சித்தலைவர்கள் பலருக்கும் ஏற்கெனவே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் திமுக அலுவலகத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேராசிரியர் ஸ்ரீனிவாசன்
பேராசிரியர் ஸ்ரீனிவாசன்

இதுதொடர்பாக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசனிடம் பேசினோம். "பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்பது தான் தமிழக பாஜகவின் நிலைபாடு. தமிழக மீனவர் பிரச்சினையில் மத்தியில் பத்தாண்டுகள் ஆட்சியில் திமுக இருந்தபோதுதான் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது அமைதியாக இருந்தவர் ஸ்டாலின், இப்போது மீனவர் பிரச்சினையைக் கவனியுங்கள் என்று பிரதமரிடம் வலியுறுத்துவது நல்ல நாடகம். அதேபோல கச்சத்தீவை மீட்டு மீனவர் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கச்சத்தீவைத் தாரை வார்த்தது யார் என்பதை ஸ்டாலின் சொல்லவில்லை. அன்று பிரதமராக இருந்தவர் இந்திராகாந்தி. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஆனால், கச்சத்தீவைக் கொடுக்கக்கூடாது என ஜனசங்க எம்.பியாக இருந்த வாஜ்பாய் பேசினார். கச்சத்தீவைக் கொடுக்கக்கூடாது என நீதிமன்றத்தில் ஜனசங்க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி வழக்குத் தொடுத்தார். கச்சத்தீவை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த நிலப்பரப்பையும் இன்னொரு நாட்டிற்கு விட்டுக் கொடுக்க பாஜக அனுமதிப்பதில்லை. கச்சத்தீவில் துரோகம் செய்தது திமுகதான்" என்று கூறினார்.

டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலய அலுவலகத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்துள்ளாரே என்று அவரிடம் கேட்டதற்கு, "இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை பிரதமர் மோடிதான் முடிவெடுக்க முடியும். அப்படி விழாவில் கலந்து கொண்டால் மோடியின் பெருந்தன்மையைக் காட்டும். கலந்து கொள்ளாவிட்டால் நடைமுறை எதார்த்த அரசியலைக் காட்டும்" என்றார்.

Related Stories

No stories found.