இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட (நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து குறைந்தது 7 எம்பிக்களைப் பெற்ற) தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு நாட்டின் தலைநகரான டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்குவது என்று கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகம் கட்ட கடந்த 2013-ம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது.
தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர், கடந்த ஜூன் மாதம் முதன்முறையாக டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் கட்சி அலுவலக கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார். பிறகு ஜூலை மாதம் மீண்டும் டெல்லி சென்ற அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைக்க வருமாறு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, வருகிற 16-ம் தேதி மீண்டும் தமிழக முதல்வர் டெல்லி செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல், அவர் டெல்லி திமுக அலுவலகத்தை திறந்து வைப்பார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.