சர்வாதிகாரத்தை அகற்றுங்கள்... அறிமுக கூட்டத்திலேயே பாஜகவை விளாசிய சுனிதா கேஜ்ரிவால்!

சுனிதா கேஜ்ரிவால்
சுனிதா கேஜ்ரிவால்

நாட்டில் சர்வாதிகாரத்தை அகற்றவும், ஜனநாயகத்தை காக்கவும், மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என தனது அறிமுக கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரியும், தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறையில் இருந்தபடியே அவர் தனது முதலமைச்சர் பொறுப்பை மேற்கொண்டு வருகிறார்.

சுனிதா கேஜ்ரிவால்
சுனிதா கேஜ்ரிவால்

இதனிடையே டெல்லியில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக களம் இறங்கியுள்ளார். நேற்று கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கோண்ட்லி பகுதியில் அவர் தனது பிரச்சாரத்தை துவக்கினார். காரில் இருந்தபடி மக்களிடம் அவர் வாக்குகளை சேகரித்தார்.

சுனிதா கேஜ்ரிவால்
சுனிதா கேஜ்ரிவால்

அப்போது பேசிய அவர், ”உங்களது முதலமைச்சரும் எனது கணவருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எந்த நீதிமன்றமும் அவரை குற்றவாளி என அறிவிக்கவில்லை. விசாரணை மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை 10 ஆண்டுகளுக்கு நடைபெற்றால் அவர் பத்தாண்டுகளும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டுமா?. முன்பு நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தால் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டு கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஒரு புதிய முறையை இப்போது கொண்டு வந்திருக்கிறார்கள். விசாரணை நடைபெறும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது சர்வாதிகாரம். அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 22 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்துக் கொண்டு வருகிறார். சிறையில் அவருக்கு இன்சுலின் மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அர்விந்த் கேஜ்ரிவாலை கொல்ல வேண்டும் என நினைக்கிறார்களா?’ என்றார்.

மேலும், “மக்கள் அவரை விரும்புகிறீர்கள் என எனக்கு தெரியும். அதுதான் அவர்கள் பிரச்சினையே. இதில் அவருடைய தவறு என்ன? டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏனென்றால் அவர் பள்ளிகளை கட்டினார். இலவச மின்சாரம் வழங்கினார். சுகாதார திட்டங்களை மேம்படுத்தினார். இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உங்கள் வாக்கின் வலிமையை உணர்ந்து கொள்ளுங்கள். மே 25ம் தேதி சர்வாதிகாரத்தை அகற்றி ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நாம் ஒன்றாக போராடி இதில் வெற்றி பெறுவோம். ”என்றார். தனது அறிமுக உரையிலேயே சுனிதா கேஜ்ரிவால் இவ்வாறு பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சுனிதா கேஜ்ரிவாலும், ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in