
கேரளத்தின் ஜனபக்சம் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.சி.ஜார்ஜின் ஜாமீனை ரத்துசெய்து திருவனந்தபுரம் ஜே.எம். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தில் ஜனபக்ஷம் என்ற அமைப்பை நடத்தி வருபவர் முன்னாள் எம்எல்ஏ-வான பி.சி.ஜார்ஜ். சர்ச்சை மனிதரான இவர், “முஸ்லிம் கடைகளில் டீ குடிக்காதீர்கள். மாற்று மதத்தினருக்கு 'டீ'யில் ஆண்மையைப் பாதிக்கும் பொருள்களைக் கலந்து கொடுக்கிறார்கள்” என போகிற போக்கில் கொளுத்திப் போட்டார். இதற்காக கைது செய்யப்பட்ட இவர், ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பின்னரும் தன் பேச்சைக் குறைத்துக் கொள்ளவில்லை. “என்னை கைது செய்து பயங்கரவாதிகளுக்கு பினராயி விஜயன் பரிசு கொடுத்துள்ளார்” என்று முழங்கினார். 33 ஆண்டுகள் எம்எல்ஏ-வாக இருந்த ஜார்ஜ், கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.
மதரீதியிலான சர்ச்சைப் பேச்சுக்களால் கைதாகி வெளியில் வந்தபின்னும் தொடர்ந்து அவதூறு பேச்சுக்களை ஜார்ஜ் பேசிவந்தார். இதனால் அவரது ஜாமீன் மனுவை ரத்துசெய்யக்கோரி காவல் துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்பேரில் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்(எண் 2) பி.சி.ஜார்ஜின் ஜாமீனை ரத்துசெய்தது. இதனால் பி.சி.ஜார்ஜ் எப்போது வேண்டுமானாலும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.