திமுக பேச்சாளர் மீது அவதூறு வழக்கு தாக்கல்: ஆளுநரை விமர்சித்ததால் தமிழக அரசு அதிரடி

திமுக பேச்சாளர் மீது அவதூறு வழக்கு தாக்கல்: ஆளுநரை விமர்சித்ததால் தமிழக அரசு அதிரடி

தமிழ்நாடு ஆளுநரை கடுமையாக விமர்சித்து பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் அண்மையில் அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் குறித்து அவதூறாக பேசினார். இந்த நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆளுநரின் துணைச் செயலாளர் பிரசன்ன ராமசாமி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், ஆளுநர் ரவியை பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடர சென்னை அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு கடந்த 15-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக பேச்சாளருக்கு எதிராக தமிழக அரசே அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in