கருணாநிதி புகழ்பாட ஒரு இணைய வானொலி!

தனி ஒருவராகச் சாதித்த ஒரு திமுக தொண்டர்
கருணாநிதி புகழ்பாட ஒரு இணைய வானொலி!
கருணாநிதி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழ்பாடும் வகையிலும், திராவிடத்தின் பெருமைகளைப் பேசும் வகையிலும் ’கலைஞர் எஃப்எம்’ என்ற பெயரில் இணைய வானொலி ஒன்றை நடத்துகிறார் தென்காசியைச் சேர்ந்த மகேந்திரன். திராவிட இயக்க சிந்தனையாளர்களுக்கு இந்த வானொலி தினமும் கருத்துத் தீனி போட்டுக்கொண்டிருக்கிறது.

கருணாநிதி அரை நூற்றாண்டின் வரலாறு. அவரது பெயரை விலக்கிவைத்துவிட்டு தமிழக அரசியலை மட்டுமல்ல, ஏன் இந்திய அரசியலையே முழுமையாக உணர முடியாது. கருணாநிதியின் தேவை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு இருப்பதாகச் சொல்லும் மகேந்திரன், திராவிடத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவே இந்த வானொலியை ஆரம்பித்ததாகச் சொல்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் இன்னும் விரிவாகப் பேசிய மகேந்திரன், “தென்காசி மாவட்டத்தின் சிவகிரி என் சொந்த ஊர். எங்கள் குடும்பமே பாரம்பரியமாக திமுக குடும்பம். என்னோட அப்பா மூ.ஜெயச்சந்திரன் விவசாயக் கூலி. திமுகவிலும் வாசுதேவநல்லூர் ஒன்றிய பிரதிநிதியாக இருந்தார். அப்பாவுக்கு, அண்ணா, கருணாநிதி என்றால் ரொம்பப் பிரியம். அந்தக் காலத்தில் அப்பாவிடம் ஒரு சைக்கிள் இருந்தது. எனது பள்ளிக்காலங்களில் இரவு நேரத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு என்னையும் சைக்கிளின் முன்னால் உட்காரவைத்து அழைத்துச் செல்வார். பொது இடங்களில் மாத்திரமல்லாது வீட்டுக்குள்ளும் கருணாநிதியின் புகழை சதா சர்வநேரமும் பாடிக்கொண்டே இருப்பார் அப்பா.

’ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் அவசியம் இல்லை’ என்பது தொடங்கி, அண்ணாவின் கருத்துகளை அப்பா கோடிட்டுக் காட்டிக்கொண்டே இருப்பார். கடவுள் மறுப்பைத் தாண்டி பெரியார் இந்த சமூகத்துக்குச் செய்த சீர்திருத்தங்களை மொத்தக் குடும்பத்தையும் உட்கார வைத்துப் போதிப்பார். திமுக ஆட்சியில் கருணாநிதி சமத்துவபுரம் கட்டித் திறந்தநாளில், எங்கள் வீட்டில் பாயாசம் வைக்கச் சொன்னவர் அப்பா.

பெரியார் கனவுக்கு கருணாநிதி உயிர் கொடுத்திருக்கிறார் என சிலாகித்தார். இதோ... இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதொடங்கி, சமூகநீதி காக்கும் விஷயத்தில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இதையெல்லாம் கொண்டாட என் தந்தை உயிருடன் இல்லை. அவர் மூலமே திராவிடமும், கருணாநிதியும், அண்ணாவும், பெரியாரும் என் ஆழ்மனதில் இறங்கினார்கள். கட்சிப் போராட்டங்களில் கலந்துகொண்டு அப்பா பலமுறை சிறைக்கும் சென்றிருக்கிறார். நான் பிறக்கும்போதுகூட அப்பா சிறைக்குள்தான் இருந்தார். அவரது கனவுகளைச் சுமந்தவனாக கருணாநிதியின் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘கலைஞர் எஃப்எம்’ இணைய வானொலியைத் தொடங்கினேன்” என்றார்.

முழுதாக ஒரு ஆண்டு கஷ்டப்பட்டு உழைத்து தகவல்களைத் திரட்டி, அதன் பிறகே இந்த இணைய வானொலியைத் தொடங்கி இருக்கிறார் மகேந்திரன். தனது தந்தை காலத்திலிருந்தே திமுகவில் இருக்கும் இவர், தனக்காக கட்சிப் பொறுப்பு எதுவும் கேட்டதில்லை. அதைத் தான் விரும்பவும் இல்லை என்று சொல்லும் மகேந்திரன், “ஒரு கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தில் அதுவும் சமூக நீதியைத் தாங்கிப் பிடிக்கும் ஓர் இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராக இருப்பதே பெருமைதான்” என்கிறார்.

இவரது கலைஞர் எஃப்எம் இணைய வானொலி, 24 மணிநேரமும் கருணாநிதி பற்றி பேசுகிறது. “இந்த வானொலியைக் கேட்க தனி இணையதளமும், மொபைல் போனில் கேட்பவர்களுக்கு வசதியாக செயலியும் வடிவமைத்திருக்கிறேன். இதில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆற்றிய முக்கியமான உரைகளும் ஒலிக்கும். இதேபோல் இவர்களது அரசியல் செயல்பாடுகளின் மீதான பார்வை, இலக்கியம் சார்ந்த பங்களிப்பு, சமூக நீதி சார்ந்த முன்னெடுப்புகள் ஆகியவையும் இதில் தொடர் நிகழ்ச்சிகளாக வந்துகொண்டே இருக்கும். இடையிடையே திமுகவின் கொள்கை முழக்கப் பாடல்களும் ஒலிக்கும்” என்கிறார் மகேந்திரன்.

அகில இந்திய வானொலியிலும், தனியார் பண்பலையிலும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த அனுபவத்தை வைத்து, தனியொருவனாக இந்த வானொலியைத் தொடங்கி நடத்துகிறார் மகேந்திரன். அதுபற்றியும் பேசிய அவர், “திமுக எதிர்கட்சியாக இருக்கும்போதே இந்த வானொலியைத் தொடங்கிவிட்டேன். இன்று நாடு மிகச் சிக்கலான சூழலில் உள்ளது. மனித மனங்களும், மனிதநேயச் சிந்தனையும் வளரும் தலைமுறையிடம் அருகி வருகிறது. மதமாகிய பேய் பிடியாதிருக்க வேண்டும் என்னும் திருவருட் பிரகாச வள்ளலாரின் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அதற்கு திராவிடம் மட்டுமே வழிகாட்டி. இந்தப் பணியைச் செய்வதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு பகுத்தறிவையும், பண்பையும் சிறிதளவேனும் கடத்திய திருப்தி இருக்கிறது’’ என்றார்.

மகேந்திரனின் பண்பலை வானொலிக்கு அவரது மனைவி புவனேஸ்வரியும், மகள்கள் மதி அழகி, மதிவதனியும் முதல் வரிசை நேயர்கள். “நீங்கள் இப்படி ஒரு வானொலியை நடத்துவது திமுக தலைமைக்குத் தெரியுமா?” என்று கேட்டதற்கு, “யார் சொல்லியும் நான் இதைச் செய்யவில்லை. எனது சுயவிருப்பத்தால் செய்கிறேன். வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. திமுக தொண்டர்கள் தினமும் ஆயிரக் கணக்கில் எனது நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள். தங்களது பின்னூட்டங்களையும் தருகிறார்கள்.

இந்த வானொலி பற்றி தளபதி ஸ்டாலினுக்கு தெரியுமா தெரியாதா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், ஒருமுறையேனும் அவரை நேரில் சந்தித்து நான் செய்துவரும் பணிகளைக் காட்டி ஆசிவாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். கடைக்கோடி தொண்டனாக இருப்பதால், எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ஆனாலும் என்னால் முயன்றவரைக்கும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.

12 முறை எம்எல்ஏவாகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். நூற்றைம்பதுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதிய இலக்கியச் சிற்பி, முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை மட்டும் ஏழாயிரத்துக்கும் அதிகம். எத்தனையோ பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியிலும், நல்ல கலைஞராக, தேர்ந்த விமர்சகராக, பத்திரிகையாளராக இருந்தவர். தினமும் அப்படிப்பட்ட மகத்தான மனிதரின் புகழ்பாடும் வாய்ப்பைப் பெற்றதையே பெரும் பேறாக நினைக்கிறேன்’’ என்று சொல்லிக்கொண்டே, “வணக்கம் மக்களே... இது கலைஞர் இணைய வானொலி. இது தமிழர்களின் குரல். அடுத்ததாக நாம் கலைஞரின் சட்டமன்ற உரைத் தொகுப்பு ஒன்றைக் கேட்கலாம்” என வானலைக்குள் கரைந்து போகிறார் மகேந்திரன்.

Related Stories

No stories found.