தாமரையும் ஈபிஎஸ் பக்கம் தாவினார்: வழுக்கும் வைத்திலிங்கத்தின் பிடி!

ஈபிஎஸ்ஸை  சந்தித்து ஆதரவு தெரிவித்த தாமரை ராஜேந்திரன்
ஈபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த தாமரை ராஜேந்திரன்

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் செல்வாக்கால் டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ்க்கு சில மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு நீடித்து வந்த நிலையில் தற்போது அவர்களில் ஒருவரான அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்திருக்கிறார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு பேரும் தனித்தனியாக பிரிந்து நின்று தங்கள் ஆதரவாளர்களை அணி திரட்டி வருகின்றனர். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் ஈபிஎஸ் பக்கமே சாய்ந்தனர்.

ஆனால், டெல்டா மாவட்டத்தில் வைத்திலிங்கத்திற்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கால் அவரது பேச்சைக் கேட்கும் மாவட்ட செயலாளர்களான திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் , தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆகிய மாவட்டச் செயலாளர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தனர்.

அவர்களில் அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் நேற்று இரவு ஈபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் டெல்டாவில் இருந்த வைத்திலிங்கத்தின் பிடி வழுக்கியிருக்கிறது. ஏற்கனவே திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் குமார், முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், ஆர் காமராஜ் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். தற்போது தாமரை ராஜேந்திரனும் அவர்களோடு இணைந்திருப்பதால் டெல்டாவில் ஈபிஎஸ்க்கு மேலும் வலு அதிகரித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in