`நிலக்கரி தேவை குறித்தே முடிவு செய்யப்படும்'- ராமதாஸுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

`நிலக்கரி தேவை குறித்தே முடிவு செய்யப்படும்'- ராமதாஸுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மின் நிலையங்களில் உள்நாட்டு நிலக்கரியுடன் கலந்து பயன்படுத்துவதற்காக 7.3 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கு மின்வாரியம் இவ்வளவு அவசரம் காட்டுவது தேவையற்றது. மின்வாரியத்திடம் 4.8 லட்சம் டன் வெளிநாட்டு நிலக்கரி கையிருப்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் பயன்படுத்தப்படும். 6 மாதங்களுக்கு பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்வது புத்திசாலித்தனம் அல்ல.

பன்னாட்டு சந்தையில் நிலக்கரி விலை அதிகமாக உள்ளது. நிலக்கரிக்கான தொகை டாலரில் தான் வழங்கப்பட வேண்டும். அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், டன்னுக்கு ரூ.1000 வரை மின்சார வாரியத்திற்கு கூடுதலாக செலவாகக் கூடும். ஆறு மாதங்களுக்கு பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்து சேமித்து வைப்பது அதன் தரத்தையும் பாதிக்கும். எனவே, நிலக்கரி இறக்குமதி செய்வதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் ஒத்தி வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஒன்றிய அரசு 2022-23-ம் ஆண்டுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-23-ம் ஆண்டில், மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு செய்து 6 லட்சம் டன்கள் நிலக்கரியை, டன் ஒன்றுக்கு 143 டாலர் (5% GST உட்பட) என்ற அளவில் இறக்குமதி செய்து உத்தரவு வழங்கியது. முதல் காலாண்டில் எஞ்சிய 1.3 லட்சம் டன்கள் நிலக்கரியை, ஒன்றிய அரசின் மூலம் டன் ஒன்றுக்கு 203 டாலர் என்ற அளவில் இறக்குமதி செய்து தர கேட்டுக்கொண்டது.

எதிர்வரும் ஜனவரி, பிப்ரவரி 2023-ல் நிலக்கரி தேவையை ஈடு செய்யும் வகையில், 7.3 லட்சம் டன்கள் இறக்குமதி செய்யும் வகையில், ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, 7 ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. பரிசீலனைக்கு பின் விலைப்புள்ளிகள் திறந்து எதிர்மறை விலைப்புள்ளிகள் மூலம் முடிவு செய்ய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட பின் நிலக்கரி வந்து சேர குறைந்தது 45 நாட்கள் தேவை. எனவே தற்பொழுது கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் மூலம் பிப்ரவரி மாதம் நிலக்கரி பெற முடியும். மேலும் ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யும் நேரத்தில் நிலக்கரி தேவை, இருப்பு மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in