தேர்தல் ஆணையத்தை நாட முடிவு?- ஓபிஎஸ் எடுக்கும் அடுத்த அஸ்திரம்

தேர்தல் ஆணையத்தை நாட முடிவு?- ஓபிஎஸ் எடுக்கும் அடுத்த அஸ்திரம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு அதிமுக தலைமை ஆயத்தமாகி வந்த நிலையில், ஒற்றைத் தலைமை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது கட்சிக்குள் தீ மாதிரி பற்றிக்கொண்டது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இதுதான் சமயம் என்று தனது ஆதரவாளர்களை உசுப்பேற்றி விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு ஜெயக்குமார்தான் காரணம் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஓப்பனாக கூறினார்.

இதனிடையே, ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றைத் தலைமை வேண்டாம் என்றும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் போஸ்டர் யுத்தத்தை தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மேலும், பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஆவடி காவல்துறை ஆணையரிடம் திடீரென மனு அளித்துள்ளார். இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டக் கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் எடுத்திருக்கும் இந்த அஸ்திரம் அவருக்கு சாதகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in