திரும்பும் பக்கமெல்லாம் கண்ணிவெடி... என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் வாக்குப் பதிவு நிறைவுற்றுள்ள இந்த சூழலில் அதிமுகவை நாலா பக்கமும் அபாயங்கள் சூழ்ந்து நிற்கிறது. அதிமுகவை காணாமல் ஆக்கத் துடிக்கும் பாஜக. கட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் ஓபிஎஸ் - தினகரன் - சசிகலா கூட்டணி. அதிமுகவை தட்டிவைக்க நினைக்கும் திமுக. உள்கட்சியிலேயே சித்துவேலைகள் பார்க்கும் அதிமுகவினர் என திரும்பிய பக்கமெல்லாம் கண்ணிவெடி அபாயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஒரு வழியாக தமிழகத்தில் தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. திமுக – அதிமுக – பாஜக என இந்த தேர்தல் பிரச்சாரத்தின் அனல், அக்னி நட்சத்திரத்தைக் காட்டிலும் உக்கிரமாக தகித்தது. தேர்தல் முடிந்து மற்ற கட்சிகள் கூல் மோடுக்குப் போய்விட்டன. ஆனால், அதிமுகவுக்கு இனிதான் அக்னிப் பரீட்சை ஆரம்பமாகப் போகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

2017-ல் சசிகலா தயவில் முதல்வர் இருக்கையை எட்டிப்பிடித்த எடப்பாடி பழனிசாமி, அதன்பின்னர் தனி ரூட் போட்டு பாஜகவின் ஆசியோடு சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டவர்களை கட்சியிலிருந்து தூக்கியெறிந்தார். இவர்களை கட்டம் கட்டுவதற்காக ஓ.பன்னீர்செல்வத்தின் மீது பாசமழை பொழிந்த எடப்பாடியார், காரியம் முடிந்ததும் அவருக்கும் ஸ்கெட்ச் போட்டுவிட்டார்.

இப்படி இபிஎஸ் செய்த ஒவ்வொரு நகர்வுக்கும் பின்னால், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாஜகவின் கைங்கரியம் இருந்துகொண்டே வந்தது. ஒருவழியாக கடந்த ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் ஆனார் இபிஎஸ். தனது வளர்ச்சிக்கு தடையாக இருந்த ஒவ்வொரு தடைக்கல்லையும் கவனமாக தூக்கியெறிந்த இபிஎஸ், அப்படித்தான் காரியம் முடிந்ததும் பாஜகவையும் ஓரங்கட்டினார். எதிர்ப்புகளை எல்லாம் என்னதான் தந்திரமாக அவர் தட்டிவிட்டு சமாளித்து மேலே வந்தாலும் சதிகளும் சூழ்ச்சிகளும் அவரை பின் தொடர்கின்றன.

அபாயம்-1:

எடப்பாடி பழனிசாமி பாஜகவை விட்டாலும், பாஜக அவரை விடுவதற்கு தயாராக இல்லை. எனவே தேர்தல் நெருக்கத்தில் ஏதாவது டீல் பேசி அவரை கூட்டணிக்கு கொண்டுவரலாம் என முயற்சித்தது. ஆனால் பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார் இபிஎஸ். எனவே, தேர்தல் கூட்டணியிலேயே அதிமுகவுக்கு பல அதிர்ச்சி வைத்தியங்களை கொடுத்தது பாஜக.

ஏற்கெனவே அதிமுக அணியில் இருந்த வாசன், ஜான்பாண்டியன், சரத்குமார் உள்ளிட்டோரை தங்கள் பக்கம் இழுத்ததுடன், இபிஎஸ் பெரிதாக நம்பிக்கொண்டிருந்த பாமகவையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்து பயங்கர ஷாக் கொடுத்தது பாஜக. தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்திலும் பாஜக தலைவர்கள் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் இஷ்டத்துக்கு சீண்டினார்கள்.

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி

பிரச்சாரத்தின் தொடக்கத்தில் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, கடைசி கட்டத்தில் பாஜகவை விளாச ஆரம்பித்தார். இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அண்ணாமலை, “தேர்தலுக்குப் பின் அதிமுகவே இருக்காது” என சவால் விட்டார். அத்தோடு விடாமல், “அதிமுக ஓபிஎஸ், தினகரன் பக்கம் வரும்” என்றும் எடப்பாடியாருக்கு எரிச்சலைக் கிளப்பினார்.

தொடக்கத்தில், பாஜகவுக்கு பெரும் செல்வாக்கு இருக்கும், கணிசமான இடங்களை கைப்பற்றலாம், நிச்சயமாக அதிமுகவை 3-ம் இடத்துக்கு தள்ளிவிடலாம் என அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால் கள எதார்த்தம் வேறு மாதிரியாக இருந்தது.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொஞ்சம் சேதாரம் ஏற்பட்டிருந்தாலும் கூட அதிமுகவின் கட்டமைப்பு அப்படியே இருப்பதை பாஜக உணர்ந்தது. உதாரணத்துக்கு, பாஜக வலுவாக இருக்கும் என நம்பிய கொங்கு மண்டலத்திலேயே அதிமுக பெரும் ஆதிக்கம் செலுத்துவதை கண்டுகொண்டனர்.

அதேபோல வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் என எல்லா பக்கமும் அதிமுக, இரட்டை இலைக்கான செல்வாக்கு இன்னும் குறையவில்லை என பாஜக தெரிந்துகொண்டது. எனவே, 2026-ல் மாற்று சக்தியாக உருவாகவேண்டுமானால் அதற்குள் அதிமுகவை ஆட்டம் காணவைக்க வேண்டும். முடிந்தால் கட்சியின் சின்னத்தையே முடக்க வேண்டும் என்பதுவரை ஸ்கெட்ச் போட்டுள்ளது பாஜக. சரியாகச் சொல்ல வேண்டுமானால் இனிமேல் தான் பாஜகவின் உண்மையான ரூபத்தையே எடப்பாடி பழனிசாமி பார்க்கப்போகிறார்.

அபாயம்-2:

பாஜகவின் குட்புக்கில் இடம்பெற்றுவிட்ட தெம்பில் தினகரன் மற்றும் ஓபிஎஸ் இப்போது நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். எப்படியும் இம்முறை பாஜக நமது கைகளுக்கு அதிமுகவை கொண்டுவந்து கொடுத்துவிடும் என்ற உற்சாகமும் அவர்களிடம் தெரிகிறது. இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சசிகலாவும் இப்போது களத்தில் குதித்துள்ளார்.

அவர் தொகுதி வாரியாக அதிருப்தியில் உள்ள அதிமுகவினரின் விவரங்களை திரட்ட ஆரம்பித்துள்ளார். ஒருவேளை, இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைக்குமேயானால், அவரும் தினகரன், ஓபிஎஸ்சோடு கைகோத்து பாஜகவின் ஆசியோடு அதிமுகவை கைப்பற்ற களமிறங்குவார். ஒன்று, அதிமுகவை கைப்பற்ற வேண்டும். அல்லது கட்சியை உடைத்து பெயரை, சின்னத்தை முடக்கவேண்டும் என்ற திட்டமும் இவர்களிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின்

அபாயம்-3:

பாஜகவைப் போலவே இந்த தேர்தலில் அதிமுகவின் பெர்ஃபார்மென்ஸை பார்த்து திமுகவும் அரண்டு போனது. அதிமுக – பாஜக அணிகள் இரண்டாக உடைந்து கிடப்பதால் எளிதாக வெற்றிபெற்று விடலாம் என கணக்குப் போட்டது திமுக. ஆனால், களத்தில் மீண்டும் படு சுறுசுறுப்பாக பணியாற்றியது அதிமுக. அதேபோல எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் பேச்சுக்கும் மக்களிடம் வரவேற்பு இருந்ததையும் திமுக கவனிக்க தவறவில்லை.

பிரச்சாரத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் பேசி இபிஎஸ் ஸ்கோர் செய்துள்ளார் என்பதையும் திமுக உணர்ந்திருக்கிறது. குறிப்பாக, மேற்கு, மத்திய, வட மாவட்டங்களில் திமுகவுக்கு கடுமையான டஃப் கொடுத்திருக்கிறது அதிமுக. தென்மாவட்டங்களில் மட்டும் அதிமுக கொஞ்சம் பலவீனமாக இருந்தது. அதிலும், மதுரை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல் போன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி டஃப் கொடுத்தது. மொத்தமாக, தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு கடும் போட்டியை உருவாக்கியது அதிமுக கூட்டணி.

அதிமுக இதே வேகத்தில் பயணித்தால் எப்படியும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு பெரும் தலைவலியாக மாறிவிடும் என அச்சப்பட ஆரம்பித்துள்ளது திமுக. இதே தகவல்களை உளவுத்துறையும் திமுகவிடம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, வரும் தேர்தலுக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை, நிர்வாகிகளை தூக்குவது என பலவிதமான ஸ்கெட்ச்களை அதிமுகவுக்கு எதிராக திமுகவும் போடலாம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அபாயம்-4:

எடப்பாடி பழனிசாமியே இந்த தேர்தலில் எதிர்பார்க்காத விஷயம், உட்கட்சியினரே சொதப்புவார்கள் என்பதைத்தான். இந்த தேர்தலில் சில மாவட்டங்களில் அதிமுக சிறப்பாக செயல்பட்டாலும், சில மாவட்டங்களில் பெரிய அளவில் சொதப்பினார்கள். நம்பிக்கை இல்லாமல் வேலை பார்த்தது, திமுகவுக்கு ஆதரவாக இருந்தது, மேலிடம் கொடுத்த பணத்தை சுருட்டியது என மேல்மட்ட நிர்வாகிகளே போக்குக் காட்டினார்கள்.

இதை மனதில் வைத்துத்தான், அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், “ஏன் உங்களுக்கு கட்சி மீது விசுவாசம் இல்லாமல் போய்விட்டது?” என வெளிப்படையாகவே குமுறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக மாவட்ட ரீதியாக ஆலோசித்து புல்லுருவிகளை களையெடுக்கவும் அவர் தயாராகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதேசமயம், தேர்தல் முடிவுகளை சாக்காக வைத்து எடப்பாடியாருக்கு எதிராகவும் பூகம்பத்தை கிளப்பவும் கட்சிக்குள்ளேயே சிலர் தயாராக் இருக்கிறார்கள்.

2026 தேர்தலுக்குள் கட்சியினரை கட்டுக்கோப்பாக கொண்டுவரவேண்டும் என நினைக்கிறார் இபிஎஸ். ஆனால், ஜெயலலிதா இருந்த காலத்தில் ராணுவக் கட்டுப்பாட்டை இபிஎஸ்சால் கொண்டுவரமுடியுமா என்பதே இப்போதைய சவால்.

இந்தத் தேர்தலில் கணிசமான வெற்றி, நல்ல வாக்கு சதவீதத்தை பதிவு செய்யும் பட்சத்தில் அதிமுகவுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கலாம். ஒருவேளை, இதற்கு நேர்மாறாக நடந்தால் கண்ணிவெடி தாக்குதல்களை எதிர்கொள்ள அதிமுகவும் எடப்பாடியாரும் தயாராக இருக்க வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in