`ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது'- ஓபிஎஸ்ஸுக்கு எதிராக களமிறங்கினார் ஈபிஎஸ்

`ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது'- ஓபிஎஸ்ஸுக்கு எதிராக களமிறங்கினார் ஈபிஎஸ்

பொதுக்குழு செல்லாது என்ற துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஈபிஎஸ் ஆதரவாளர் சி.வி. சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

“பொதுக்குழுக் கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. இதற்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் இல்லை. பொதுக்குழு அடியாட்கள் வைத்து நடத்தப்பட்டிருக்கிறது. கழகத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்தது செல்லாது. மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டுவதற்குப் பொதுக்குழுவிற்கு அனுமதி கிடையாது” எனத் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விதி 19, பிரிவு 7-ன் படி பொதுச் செயலாளர் பொதுக்குழுவைக் கூட்டலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குப் பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் உள்ளது. ஐந்தில் ஒரு பகுதி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தலைமைக் கழகத்தில் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட முடியும். அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் கட்டாயமாகப் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அதன்படி 23-ம் தேதிக்கு முன்புவரை ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும். தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. கழகத்தில் தற்போது ஓபிஎஸ் பொருளாராகவும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளராகவும் மட்டுமே கட்சியில் நீடிக்கிறார்கள்.

பொதுக்குழு உறுப்பினர்கள் 2,665 பேருக்கும் முறையான புகைப்படமிட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தீர்மானம் குறித்த பதிவில்தான் பொதுக்குழுவில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையெழுத்திட்டார்கள். வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் பெறவில்லை. நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் வைத்தியலிங்கம் மட்டும்தான் அடையாள அட்டையைக் காட்டாமல் ஓபிஎஸ்ஸுடன் உள்ளே வந்துவிட்டார்.

எவ்வித சட்ட விதிமீறல்களும் பொதுக்குழுவில் நடைபெறவில்லை. விதி 19, பிரிவு 5-ன்படி பொதுக்குழு கூடி கழக அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கழக பொதுச் செயலாளரோ, ஒருங்கிணைப்பாளரோ தேர்ந்தெடுப்பார்கள் என எங்கேயும் கூறப்படவில்லை. அந்த விதிகளின்படி நேற்று அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் வழி மொழிந்தார். கழக சட்ட விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பொதுக் குழு அங்கீகரிக்க வேண்டும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in