`திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது'- டெல்லியில் கொந்தளித்த சி.வி.சண்முகம்

`திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது'- டெல்லியில் கொந்தளித்த சி.வி.சண்முகம்

அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்தது தொடர்பான வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிமையியல் வழக்கு தொடர்ந்து அதிமுக அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாம் என்று கூறி, ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் ஆதரவாளரான சி.வி.சண்முகம், "அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்று, சிஆர்பிசி 145, 146-ன் படி ஆர்டிஓ எடுத்த நடவடிக்கை என்பது செல்லாது. அவர் அதிகார வரம்பை மீறி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். ஆகவே அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த அலுவலகம் என்பது எடப்பாடி பழனிசாமியிடம் தான் இருக்கிறது. அவரிடம் அந்த அலுவலகத்தின் உடமையை ஒப்படைக்க வேண்டும் என்று 20.7.2022 அன்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அடுத்து, 21.7.2022 அன்று அலுவலகத்திற்கு நாங்கள் சென்று எங்கள் பொறுப்பில் பெற்றுக் கொண்டோம்.

அந்த உத்தரவை எதிர்த்து கழகத்தை விட்டு நீக்கப்பட்டு இருக்கிற ஓ.பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், சொன்ன ஒரு முக்கியமான கருத்து, இது கவனிக்கப்பட வேண்டிய கருத்து, ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சம்மட்டி அடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய அதிகார துஷ்பிரயோகத்தை இன்றைக்கு தோலுரித்துக் காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஒரு அரசியல் கட்சியினுடைய அலுவலகத்தை நீங்கள் இப்படி முடக்கினால் எப்படி? ஒரு அரசியல் கட்சி எப்படி இயங்க முடியும். இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமான செயல் என்று உச்சநீதிமன்றம் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சொல்லியிருக்கிறது.

ஆர்டிஓ தன் அதிகார வரம்பை மீறி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். 11.7.2022 அன்று அதிமுக அலுவலகத்தின் முன்பாக உள்ள சாலையில் நடைபெற்ற ஒரு சம்பவம் என்பது சட்டம், ஒழுங்கு பிரச்சினை. இது ஒரு அலுவலகம் சம்பந்தமான, இரு தரப்பிற்குமான, யாருக்கு உரிமை என்ற வழக்கு இல்லை என்று தெள்ளத்தெளிவாக சொல்லி, ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினையை எப்படி ஒரு அரசியல் கட்சினுடைய அலுவலகத்தை ஆர்டிஓ சீல் வைக்கலாம். சீல் வைத்தது முறையல்ல, தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிற ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்திருக்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in