`விலை உயர்ந்த பொருட்களை ஓபிஎஸ் திருடிச் சென்றுவிட்டார்'- காவல்நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்

`விலை உயர்ந்த பொருட்களை ஓபிஎஸ் திருடிச் சென்றுவிட்டார்'- காவல்நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அதிமுக எம்.பி .சி.வி. சண்முகம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் செய்துள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், கடந்த 11-ம் தேதி ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றது விட்டதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கத்தி, கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்து , விலை உயர்ந்த பொருள்கள் மற்றும் ஆவணங்களைத் திருடிச் சென்றதுடன் அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

உட்கட்சி பிரச்சினையில் அதிமுக தலைமைக் கழகத்தை அடித்து நொறுக்கியது தவறு. அதிமுக தலைமைக்கழகம் சீல் வைக்கப்பட்டதற்கு ஓபிஎஸ் தான் காரணம். அதிமுக தலைமைக் கழகம் சூறையாடப்பட்டது தொடர்பாக, மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் புகார் அளித்துள்ளார், ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபியிடம் மனு அளித்திருந்தார்.

காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தும், அவர்கள் கண்முன்னே அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,” முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதிமுகவின் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அவை அனைத்தையும் ஓ.பன்னீர் செல்வம் தனது வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுவிட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அளித்த புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஒரு வாதத்திற்கு அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் என்று வைத்து கொண்டாலும், அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களைப் பாதுகாக்கவும், சரிபார்க்கவும் தான் ஓபிஎஸ்சுக்கு அதிகாரம் உண்டு. அதனை எடுத்துச் செல்வதற்கு அவருக்கு எந்த அதிகாரம் கிடையாது. அது அதிமுகவின் சொத்து. அதிமுக வங்கி கணக்குகள் முடக்கம் செய்யக்கோரி ஓபிஎஸ் ஐ.நாவிற்கு கூட கடிதம் எழுதட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in