
இந்தி தமிழகத்தில் எந்த வகையில் நுழைய முற்பட்டாலும் அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். தயிர் எங்களுக்கு உயிர், அது உணவல்ல, உயிர் போன்றது எனத் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொழில் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசினார்.
அப்போது, ‘’ முதலமைச்சரின் சிறப்பான வழிகாட்டுதலில் தொழில்துறையின் கீழ் செயல்படும் சிப்காட், டிட்கோ போன்ற நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடிய ஒரே நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் இரண்டாவது தொழில் வளர்ச்சி உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மின்கட்டண உயர்வைப் பொறுத்தவரை தொழில் நிறுவனங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. முதலமைச்சரின் கரங்களின் கீழ் தொழித்துறை நிறுவனங்கள் பாதுகாப்பாக, லாபகரமாக இயங்கி வருகிறது.
இந்திய அளவில் தமிழ்நாடு மின் வாகனங்களின் தலைநகராக உருவாகி வருகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டின் உற்பத்தி பங்கு 24.47 சதவீதமாக உள்ளது. இலக்கான 30 சதவீதத்தை விரைவில் எட்டுவோம் பின் தங்கிய 25 மாவட்டங்களில் இருந்து 47 சதவீதத்தில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. இங்கு 37 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறையை பொறுத்தவரை பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இந்தி எதிர்ப்பு என்பது திராவிட உணர்வோடு ஒட்டி வந்துள்ளது. நம் அனைவருக்கும் அந்த உணர்வு என்பது உள்ளது. அது எந்த வடிவில் எப்படி வந்தாலும் அதனை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து தயாராக இருக்கிறோம்.
எப்போதெல்லாம் அந்த முயற்சிகள் எடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதனை ஆரம்பத்திலேயே முதல்வர் கிள்ளி எறிந்து விடுகிறார். ஆவின் தயிர் பாக்கெட்டில் கூட அந்த பிரச்சினை வரும்போது தஹி எங்களுக்கு நஹி என்று கூறினார்கள். தயிர் எங்களுக்கு உயிர், அது வெறும் உணவல்ல அது எங்களின் உணர்வு என கூறினோம்.
மேலும், ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அது நாட்டு உடைமையாக்கப்படும். அனைத்து கல்லூரிகளிலும் இளைஞர் இலக்கிய பாசறை திங்கள் தோறும் நடத்தப்படும்’’ என்றார்.