‘பிரதமர் மோடியின் கொடூரமான நகைச்சுவை’ - ரோஸ்கர் மேளாவை விமர்சிக்கும் தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர்

 ‘பிரதமர் மோடியின் கொடூரமான நகைச்சுவை’ - ரோஸ்கர் மேளாவை விமர்சிக்கும் தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர்

வேலை வாய்ப்புகளை வழங்குவதாக சொல்லும் ரோஸ்கர் மேளாக்கள் ஒரு ‘கொடூரமான நகைச்சுவை’ என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் செயல் தலைவரும், தெலங்கானா மாநில ஐடி, தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான கே.டி.ராமராவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் ரோஸ்கர் மேளா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் என்பது குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தலுக்கு முன்பு நடத்தப்படும் புதிய நாடகம் என தெரிவித்து தெலங்கானா அமைச்சர் கேடிஆர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைகள் நிரப்பப்படும் என்று பிரதமர் மோடி 2014ல் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அப்படியானால் கடந்த எட்டு ஆண்டுகளில் 16 கோடி வேலைகள் நிரப்பப்பட வேண்டும். எனவே கடந்த 8 ஆண்டுகளில் பாஜக அரசு நிரப்பிய பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தெலுங்கானா மாநில அரசு இதுவரை 1.50 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பியுள்ளது. மேலும் 91,000 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளோம். தவிர, தனியார் துறையில் 16.5 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 3.5 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் இது செய்யப்பட்டது. ஆனால், 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் எத்தனை பணியிடங்களை மத்திய அரசு நிரப்பியுள்ளது” என கேள்வி எழுப்பியுள்ளார்

ஹைதராபாத் வந்திறங்கும் பிரதமர் மோடி
ஹைதராபாத் வந்திறங்கும் பிரதமர் மோடி

மேலும், “நம் நாட்டில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் ஆண்டுக்கு 50,000 பணியிடங்களைக்கூட நிரப்பாமல், ஒரே நாளில் 75,000 வேலை வாய்ப்புகளை வழங்கியதாக மத்திய அரசு கூறுவது நியாயமானது அல்ல. ரோஸ்கர் மேளா என்ற இந்த புதிய ஸ்டண்ட் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு என்ன செய்தியை சொல்ல நினைக்கிறார்கள்.

ரோஸ்கர் மேளா குறித்த அறிவிப்பின் போது, ​​38 மத்திய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படியானால் 38 மத்தியத் துறைகளில் மீதமுள்ள காலிப் பணியிடங்கள் குறித்தும், அவை எப்போது நிரப்பப்படும் என்பது குறித்தும் தேசிய வேலை காலண்டரை மத்திய அரசு வெளியிட வேண்டும். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதால் சுமார் 2 லட்சம் பேர் வேலைகளை முறைப்படுத்தும் வாய்ப்பை இழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்

மேலும், கடந்த ஜூன் 9 அன்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து பிரதமர் மோடிக்கு தான் ஒரு திறந்த கடிதம் எழுதியதாகவும், ஆனால் அதற்கு மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் அமைச்சர் கேடிஆர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in