காங்கிரஸ் கரைசேருமா? - தொடங்கியது செயற்குழுக் கூட்டம்

காங்கிரஸ் கரைசேருமா? - தொடங்கியது செயற்குழுக் கூட்டம்
இடமிருந்து வலம் - பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்திகோப்புப் படம்

5 மாநிலத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, ஒருவழியாக சுயபரிசோதனையில் இறங்கியிருக்கிறது. தற்போது டெல்லியில் நடக்கும் செயற்குழுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக்கப்பட்ட செயற்குழுவில் அங்கம் வகிக்கும் 68 உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றிருக்கும் இக்கூட்டத்தில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர்களும் இக்குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

குறிப்பாக, காங்கிரஸ் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் ஆகியோரும் பங்கேற்றிருக்கின்றனர். இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸின் கைவசம் இருக்கும் இரண்டே இரண்டு மாநிலங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், பாஜக, ஆம் ஆத்மி கட்சி உருவாக்கியிருக்கும் கடும் சவாலை எதிர்கொள்ளவும் காங்கிரஸ் கடும் முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அதற்குக் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனும் கருத்து காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது. உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன.

2021-ல் நடந்த மேற்கு வங்கம் மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட அசோக் சவான் குழு அளித்த பரிந்துரைகளைக் கட்சி இன்னும் செயல்படுத்தவில்லை எனும் விமர்சனம் காங்கிரஸ் கட்சியின் பல முக்கியத் தலைவர்கள் மத்தியில் நிலவுகிறது.

உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதிய ஜி-23 தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். கபில் சிபல், மணீஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் டெல்லியில் உள்ள குலாம் நபி ஆசாத் வீட்டில் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

இந்தச் சூழலில், இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, இன்று காலை சோனியா காந்தி இல்லத்தில் நடந்த காங்கிரஸ் நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில், ம்ல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், மாணிக் தாகூர், மணீத் திவாரி உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியில்லை என்பதால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் கலந்துகொள்ள முடியவில்லை. ஏ.கே.ஆண்டனி, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போன்றோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Related Stories

No stories found.