'மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்!' : நடிகர் பாக்யராஜ் சர்ச்சை பேச்சு

'மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்!' : நடிகர் பாக்யராஜ் சர்ச்சை பேச்சு
விழாவில் பேசும் பாக்யராஜ்...

"பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்" என்றும் நடிகரும், திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நூலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட, நடிகரும், திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

அப்போது விழாவில் கே.பாக்யராஜ் பேசுகையில்,, " அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றியதாக சொன்னார்கள். நான் கர்நாடகா சென்றிருந்த போது அவரைப்பற்றி பெருமையாக பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தைப் பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமரை வெளிநாடு செல்கிறார் எனக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார் ? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என பார்ப்பேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை. இக்கட்டான சூழல் வரும் போது சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது" என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில்," பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். இத்தகையவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டார்கள். பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது” என்று அவர் பேசினார்.

மோடியை அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டு எழுதிய சர்ச்சை ஏற்கனவே எழுந்துள்ள நிலையில் இயக்குநர் கே.பாக்யராஜ், குறைபிரசவத்தில் பிறந்தவர்களை கேலி பேசுவது போன்று பேசிய பேச்சு அடுத்த சர்ச்சையைத் துவக்கி வைத்துள்ளது.

Related Stories

No stories found.