விமர்சனங்கள் என்னை ஒருபோதும் முடக்கிவிடாது!

சென்னை மேயர் பிரியா ராஜன் பேட்டி
மேயர் பிரியா ராஜன்
மேயர் பிரியா ராஜன்

சென்னை மேயர் பதவிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்களும் அந்த அரியணையில் அமர்ந்துள்ளனர். அப்படியாகப்பட்ட இடத்தில் சென்னையின் மூன்றாவது பெண் மேயர் என்ற பெருமையுடன் கடந்த ஆண்டு அமர்ந்தார் பிரியா ராஜன். பதவியில் அமர்ந்த நாளிலிருந்தே அவரைச் சுற்றி சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. 

அமைச்சர் சேகர்பாபுவுக்கு மேயர் பிரியா குடைபிடித்தது குத்தமானது. அமைச்சர் கே.என்.நேரு அவரை ஒருமையில் பேசியது வீடியோ சர்ச்சையானது. எல்லாவற்றுக்கும் மேலாக, மழைவெள்ள பாதிப்புகள் ஏற்பட்டபோது, முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் மேயர் பிரியா தொங்கிச்சென்ற வீடியோ பெரும் விவாதமானது. இதைவைத்து, “திமுகவில் பெண்களுக்குச் சம உரிமை இல்லை” என்றுகூட சமூக ஊடகங்களில் சிலர் சண்டை போட்டார்கள்.

ஆனால், இதற்காகவெல்லாம் அலட்டிக்கொள்ளாத மேயர் பிரியா, அத்தனையையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்திருக்கிறார். இந்த நிலையில், இந்த ஆண்டுக்காக சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் பிரியா சமர்ப்பித்திருக்கும் புரட்சிகரமான பட்ஜெட் அவரது இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. அதுகுறித்து அவரிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

இந்த ஓராண்டில் நீங்கள் சந்தித்த சவாலான விஷயம்..?

நான் மேயராக பதவியேற்றது மிகவும் பெருமையான விஷயம். அதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என நினைத்தேன். சென்னையின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது சவாலான காரியமாக இருந்தது. மழை வெள்ளத்தால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. அதை சரி செய்ய மழை நீர் வடிகால் பணிகளை மேம்படுத்தி, அடுத்த மழைக்குத் தண்ணீர் தேங்காதவாறு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின்  வழிகாட்டுதல்களுடன்  செயலாற்றி மக்களின் வாழ்த்தைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

ஓராண்டுக்குள் இதைச் செய்துவிட வேண்டுமென நினைத்து முடியாமல் போன விஷயம் ஏதாவது உண்டா..?

மாநகராட்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பது எனது முதற்கட்ட திட்டமாக இருந்தது. அதனை செயல்படுத்தி வருகிறோம். அதேபோல் சென்னையில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டுமென நினைத்தேன். யாருக்கும் இடையூறு இல்லாமல் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த திட்டம் வகுத்தோம். அதைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வாகனம் நிறுத்தம் மற்றும் மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சென்னையில் நெரிசல் இல்லாத போக்குவரத்தை ஏற்படுத்துவோம் என நம்புகிறேன்.

பதவியேற்ற நாள் முதலே உங்களைப் பற்றிய விமர்சனங்கள் ஏராளம் உண்டு. அதில் உங்களை அதிகம் பாதித்தது..?

பொதுவாழ்க்கை என்றால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதனை எதிர்கொள்ளும் பக்குவம் என்னிடம் உண்டு.  பெரிதாக நான் ரியாக்ட் செய்யாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் எத்தனையோ விமர்சனங்கள்  என்னைப் பற்றி  வந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் சில என்னைப் பாதித்தாலும்,  நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை உணரும்போது அதைக்  கண்டுகொள்ளாமல் அடுத்தகட்டத்துக்குப் போய்விடவேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனவே, விமர்சனங்கள் என்னை ஒருபோதும் முடக்கிவிடாது.

நிதிப்பற்றாக்குறை என்று சொல்லிவிட்டு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்களையும் அறிவித்துள்ளீர்கள். எப்படிச் சமாளிப்பீர்கள்?

கடந்த பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.700 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ. 334.5 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் உள்கட்டமைப்பில் எந்தக் குறையும் இல்லை. குடிமை உள்கட்டமைப்பு திட்டங்கள்,  நலத்திட்டங்கள் உள்ளிட்ட 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம்.  நிச்சயம் அனைத்தையும் செயல்படுத்துவோம். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்தினால் போதும்.

அம்மா உணவகங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி இருக்கிறீர்களே..?

ஒரு சில அம்மா உணவகங்களில் சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றுதான் கூறியிருந்தோம். இருந்தபோதும், அம்மா உணவகங்களை மூட வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லையென முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சென்னை அம்மா உணவகங்களுக்காக 2021 – 22-ல் ரூ.4.38 கோடியும், 2022 – 23-ல் ரூ.4.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதை இரண்டு மடங்காக்கி ரூ.9.64 கோடி ஒதுக்கி இருக்கிறோம். அம்மா உணவகங்கள் மூடப்படும் என்ற வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். 

இந்த பட்ஜெட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறீர்கள்; சிறப்பான காரணம் ஏதும் உண்டா?

நான் முன்பே சொன்னது தான். சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 82 திட்டங்களில் கல்விக்கான திட்டங்கள் மட்டுமே 27 என்பதை பெருமையாகவே சொல்லிக்கொள்கிறேன்.

குடும்பத் தலைவி, மேயர், திமுக நிர்வாகி இதில் எதைச் சுமப்பது கடினம்?

மேயர் என்பது பதவியல்ல பொறுப்பு. குடும்பத் தலைவி என்பது குடும்பப் பொறுப்பு. திமுக நிர்வாகியாக நான் சொல்வது, “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவள்; அதனால் வாழ்நாள் முழுவதும் திமுகவுக்காக உழைப்பேன் (I belong to Dravidian stock and I always strive to work for DMK)”. ஆக,  இம் மூன்றையும் நான் சரிசமமாகப் பார்ப்பதால் எனக்கு எதுவுமே சுமையாகத் தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in