மனுதர்ம பிரச்சாரம் திமுகவின் மதிப்பைக் கெடுக்கிறதா?

ஆ.ராசா
ஆ.ராசா

திமுக பகுத்தறிவு பேசினாலும் அந்தக் கட்சியில் இருக்கும் பெரும்பகுதியினர் பக்திமான்களாகவே இருக்கிறார்கள். கட்சித் தலைவர் ஸ்டாலினின் குடும்பமே அதற்கு உதாரணம். யதார்த்தம் இப்படி இருக்க, அண்மைக்காலமாக திமுக எம்பி-க்களான ஆ.ராசா, செந்தில்குமார் ஆகியோரின் பேச்சும் செயலும் திமுகவில் இருக்கும் பக்திமான்களையும் யோசிக்க வைத்திருக்கிறது. இந்த இருவரின் பேச்சு திராவிட சிந்தாந்தை தூக்கி நிறுத்தினாலும் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங் களை எழுப்பி வருகிறது. இன்னொரு பக்கம், இதைவைத்து பாஜக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள மெனக்கிடுகிறது!

திராவிட இயக்கங்கள் பேசிப் பேசியே வளர்ந்தவை. மேடைகளில் திராவிட இயக்கத் தலைவர்கள் பேசியதை தொண்டர்கள் அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொண்ட காலமும் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் கையிலிருந்த ஆட்சியை திமுக தனது கைக்கு மாற்றிக் கொண்டதே பேச்சாற்றலால் தான். ஆனால், இப்போது அனைத்துக் கட்சியிலுமே அப்படியான வசீகரமான பேச்சாளர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது. திமுக தலைவர் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கள நிலவரத்தைப் பேசினாலும் இவர்களைக்கூட இன்னும் கவர்ச்சிப் பேச்சாளர்களாக மக்கள் அங்கீகரிக்கவில்லை.

இப்படியான சூழலில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு ஆ.ராசா, செந்தில்குமார் போன்றவர்கள் எடுத்துவைக்கும் கருத்துகள் திமுகவுக்கு பலன் தருகிறதோ இல்லையோ பாஜகவுக்கு நன்றாகவே கைகொடுக்கிறது. பாஜகவினர் தங்களது சித்தாந்தங்களை பரப்புகிறார்களோ இல்லையோ திமுகவின் இந்து மத விமர்சனங்களை தேடிப்பிடித்து எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிடுகிறார்கள்.

குருவாயூர் கோயிலில் துலாபாரம்  கொடுத்த துர்கா ஸ்டாலின்...
குருவாயூர் கோயிலில் துலாபாரம் கொடுத்த துர்கா ஸ்டாலின்...

பாஜகவை பொறுத்தவரை இந்துத்துவா தான் கட்சியை வளர்ப்பதற்கான அதன் ஒரே பிரச்சார ஆயுதம். தனது ஒவ்வொரு அடி வளர்ச்சியிலும் திமுக இந்து விரோத கட்சி என்ற முத்திரையை மறக்காமல் குத்திவருகிறது பாஜக. ஆபத்தான இந்த அரசியலை உணர்ந்து தான், “நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் இல்லை. மதவாதம் பேசி எங்களைத் துண்டாட முடியாது” என்கிறார் முதல்வர். இதுவரை இலைமறை காய் மறையாக கோயில்களுக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்டாலின் குடும்பத்தினர் இப்போது வெளிப்படையாகவே கோயில்களுக்குப் போக ஆரம்பித்திருப்பதும் இதன் தாக்கம் தான்.

பெரியாரின் கொள்கைகளைப் பேசினாலும் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களை பகைத்துக் கொண்டு ஆட்சியை தக்கவைக்க முடியாது என்பதை திமுக நன்கு உணர்ந்து வைத்திருக்கிறது. அதனால் தான் கூட்டணிக் கட்சிகளின் விமர்சனத்தைக்கூட பொருட்படுத்தாமல் இந்து மதம் சார்ந்த சில விஷயங்களில் ரொம்பவே இறங்கி வருகிறது திமுக.

ஆ.ராசாவைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்...
ஆ.ராசாவைக் கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்...

திராவிட மாடல் ஆட்சி என்று பிரகடனம் செய்தாலும் பாஜகவினர் வலுவாக இருக்கும் பகுதிகளில் கோயில் புனரமைப்பு, கும்பாபிஷேகம் உள்ளிட்டவற்றை நடத்த அதிக சிரத்தை எடுத்து வருகிறது திமுக அரசு. மண்டைக்காடு கலவரம் தொடங்கி, சங் பரிவார் அமைப்புகளின் இடைவிடாத இந்துத்துவ பிரச்சாரமே குமரி மாவட்டத்தில் பாஜகவை இன்றைக்கும் துடிப்புடன் வைத்திருக்கிறது. அதேபோல் கோவை தொடர் கொண்டு வெடிப்பு சம்பவங்களின் தாக்கம் கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு ஆதரவான வாக்கு வங்கியை வளர்த்து வைத்திருக்கிறது. இதன் பின்னணியில் எல்லாம் இந்து என்ற ஒற்றைச் சொல் ஒளிந்திருக்கிறது.

குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு குக்கிராமத்திலும் உள்ள கோயில்களில் சங் பரிவார் அமைப்புகள் சமய வகுப்புகள் எடுக்கின்றனர். அங்கெல்லாம் ஆன்மிக கருத்தியல் விதைக்கப்படுகிறது. இந்த வகுப்புகளில் அமரும் நபர்களில் பெரும்பகுதியினர் பாஜக பக்கம் திருப்பப்படுகின்றனர். இவர்களுக்கெல்லாம் ராசா போன்றவர்களின் இந்து விமர்சன கருத்துகள் ஒவ்வாமையைத் தருகிறது. விளைவு, இவர்கள் எல்லாம் தன்னெழுச்சியாகவே திமுகவுக்கு எதிரான போராட்டங்களில் கைகோக்கிறார்கள்.

திமுகவுக்கு இதுபோன்ற தருணங்களில் கூட்டணி கட்சிகள் சன்னமாகக் குரல் கொடுக்கின்றன. ஆனால், பாஜகவுக்கு விஷ்வ இந்து பரிஷித், அகில பாரத இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்து ஆலயக் கூட்டமைப்பு, இந்து முன்னணி என பல முகங்கள் இருப்பதால் அவர்களெல்லாம் ஆ.ராசாவுக்கு எதிராக தினம் ஒரு ஊரில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஊருக்குப் பத்து பேர் தானே காவிக்கொடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்... இவர்களால் என்ன ஆகப்போகிறது என திமுக நினைத்தால் அதைவிட அறியாமை ஏதும் இருக்கமுடியாது. எனென்றால் பாஜகவின் பலமே களத்தில் நிற்பவர்கள் மட்டுமல்ல... களத்துக்கே வராமல், கண்ணுக்கே தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ய அவர்களுக்கு பெரும்படையே இருக்கிறது.

ஸ்டாலினுடன் செந்தில்குமார்...
ஸ்டாலினுடன் செந்தில்குமார்...

ஆ.ராசாவும், செந்தில்குமாரும் திமுகவின் அங்கத்தினர் தானே தவிர, அவர்கள் மட்டுமே திமுக அல்ல. ஆனால், அவர்களின் குரலானது ஒட்டுமொத்த திமுகவின் குரலாகவே பரப்பப்படுகிறது பாஜக வட்டத்தில். இது புரியாமலோ அல்லது இவர்களால் என்ன செய்துவிடமுடியும் என்ற தைரியத்திலோ ஆ.ராசா, செந்தில்குமார் போன்றவர்கள் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிவருகிறார்கள்; சிலரது நம்பிக்கைகளை புண்படுத்தியும் வருகிறார்கள். “மனுதர்மத்தில் இருப்பதைத்தானே பேசுகிறேன்” என்று ராசா போன்றவர்கள் சொன்னாலும். “அதை இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது... மனுதர்மத்தை இப்போது யார் கடைபிடிக்கிறார்கள்?” என்று திமுகவினரே கேள்வி எழுப்புகிறார்கள். நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்க இப்படியெல்லாம் பேசி மேல் வினையை விலைக்கு வாங்கவேண்டுமா என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆக, தாங்கள் இந்துக்களுக்கும் எதிரானவர்கள் இல்லை என்பதை உரக்கச் சொல்லவேண்டிய கட்டாயம் இப்போது திமுக தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ ராசா போன்ற திமுகவினராலேயே இந்த நிர்பந்தம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. பகுத்தறிவையும் யார் மனதும் புண்படாத வகையில் பக்குவமாகப் பிரச்சாரம் செய்யமுடியும். இதை ராசா, செந்தில்குமார் போன்றவர்கள் உணரவேண்டும். இல்லை... நாங்கள் இப்படித்தான் பேசுவோம் என்று எப்போதோ நீர்த்துப் போன மனுதர்மத்தை இன்னமும் பேசிக்கொண்டு அவர்கள் தங்களது அதிரடிகளைத் தொடர்வார்களேயானால் அது திமுவின் சரிவுக்கு மட்டுமல்ல... பாஜகவின் எழுச்சிக்கும் காரணமாக அமைந்துவிடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in