நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறும் சாட்டை துரைமுருகன்!
சாட்டை துரைமுருகன்

நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறும் சாட்டை துரைமுருகன்!

ஜாமீனை ரத்துசெய்ய நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரும், பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கெனவே, சமூக வலைதளங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து அவதூறு பதிவை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டவர். அப்போது, இனிமேல் இதுபோல் அவதூறு கருத்துகளை பரப்பமாட்டேன் என உறுதிமொழி பத்திரம் வழங்கி, ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

ஆனால், கொடுத்த உறுதிமொழியை அவர் மீறியதால், முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் துரைமுருகனுக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரர் அரசியல் தலைவர்களை இனிமேல் அவதூறாக விமர்சிக்கமாட்டேன் என உயர் நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் வழங்கியுள்ளார். அதன் பிறகும் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். நீதிமன்றத்துக்கு அளித்த உறுதிமொழியை மீறியதால் துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் உறுதிமொழி கடிதம் அளித்த பிறகு துரைமுருகன் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

அப்போது நீதிபதி, "தமிழக முதல்வர், அவரால் எவ்வளவு முடியுமோ, அதை விட அதிகமாகவே பணிபுரிந்து வருகிறார். முதல்வரைப் பாராட்டாவிட்டாலும், விமர்சனம் செய்வது போன்ற செயல்களைத் தவிர்க்கலாம். துரைமுருகனின் பேச்சு விவரங்களை தாக்கல் செய்யுங்கள். சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியிருந்தால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in