360 பேர் மீது கிரிமினல் வழக்குகள்... 4ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள்!

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தலில் 4ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,710 வேட்பாளர்களில் 360 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும், 476 பேர் கோடீஸ்வரர்களாகவும், 24 பேரிடம் சொத்து ஏதும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. 

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.  முதல்கட்டமாக 102 மக்களவை தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 89 தொகுதிகளுக்கும், மூன்றாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் நாளைய தினம் மே 13 அன்று நடைபெறவுள்ள நிலையில், இந்த நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தனிப்பட்ட விவரங்கள் தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இதுகுறித்து விபரங்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன. 4ம் கட்ட தேர்தலில் மொத்தம் 1,710 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 360 வேட்பாளர்கள் மீது அதாவது 21 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில்  274 வேட்பாளர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

17 பேருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 11 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகள் உள்ளன. 50 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் 5 வேட்பாளர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளன. 

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியின் மூன்று வேட்பாளர்கள்,  சிவசேனாவின் இருவர், பாரத் ராஷ்டிர சமிதியின்  10 பேர், காங்கிரஸ் கட்சியின்  35 பேர், பாஜகவின்  40 பேர், தெலுங்கு தேசம் கட்சியின் 9 பேர், பிஜு ஜனதா தளத்தின்  2 பேர், ராஷ்டிரிய ஜனதா தளத்தின்  2 பேர், சிவசேனாவின் (உத்தவ்)  2 பேர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் 12 பேர், திரிணமூல் காங்கிரஸின் 3 பேர், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த  7 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

கிரிமினல் வழக்குகளைத் தவிர, மொத்தமுள்ள 1,710 வேட்பாளர்களில் 476 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் உள்ளவர்களாக உள்ளனர். மேலும் 24 வேட்பாளர்கள் தங்களிடம் சொத்து ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளனர் என்று அந்த  ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in