
சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா நேற்று காலை சென்னையில் உள்ள தனிர் மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து சங்கரய்யா உடல் குரோம்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து என். சங்கரய்யாவின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி ஆர் பாலு, காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகர் சத்யராஜ், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகை சி.ஆர். சரஸ்வதி, நடிகர் பார்த்திபன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சங்கரய்யாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், திமுக எம்.பி ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பத்திரிகையாளர் என்.ராம், பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் என்.சங்கரய்யாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதன் பின்னர் ஆயுதப்படை வீரர்களின் மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இறுதி நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் சங்கரய்யாவிற்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் இருந்து இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கண்ணீர் மல்க அவர்கள் என்.சங்கரய்யாவிற்கு பிரியாவிடை கொடுத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!
இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!
'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!
உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்