
தமிழ்நாடு பெயரை பயன்படுத்த மறுத்த தமிழக ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகையிட முயன்ற கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன், தமிழக ஆளுநர் திட்டமிட்டு தமிழ்நாடு என்ற பெயரை மறைக்க நினைக்கிறார். அதற்காக நடந்த போராட்டங்களை சிறுமைப்படுத்த ஆளுநர் முயல்கிறார் என கூறினார். மேலும், தமிழக ஆளுநரை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என கூறிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர் நசுக்க நினைத்தால் போராட்டம் தீவிரமடையும் என கூறினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்றும் அந்த வெற்றி தமிழகத்தில் இருந்து அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவை வெளியேற்றும் வெற்றியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.