மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படத்துடன் குடியரசு தினம் கொண்டாட முடிவு!

கேரள காங்., சிபிஎம்., அமைப்புகளுக்கு எதிராக பதறும் பாஜக
மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படத்துடன் குடியரசு தினம் கொண்டாட முடிவு!

பிரதமர் மோடிக்கு எதிரானதாக இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருக்கும், பிபிசி ஆவணப்படத்துடன் குடியரசு தினத்தை கொண்டாடப்போவதாக கேரளாவின் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளின் இளையோர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது நிகழ்ந்த 2002 கலவரம் தொடர்பாகவும், அதன் பின்னணியில் மோடிக்கு எதிரான சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறது பிபிசியின் ’இந்தியா: தி மோடி கொஸ்டீன்’ என்ற ஆவணப்படம். குஜராத் கலவரம் தொடர்பான’ உச்ச நீதிமன்ற வழக்கில் மோடிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான வகையில், பிபிசியின் ஆவணப்படம் விஷமத்தமானது’ என பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

உலகளவில் வெளியான இந்த ஆவணப்படத்துகு இந்தியாவில் தடை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இந்த ஆவணப்படத்தை இணையம் வாயிலாக பகிர்வதும், அணுகுவதும்கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மோடிக்கு எதிரான ஆவணப்படத்தை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் பாஜக எதிர்ப்பாளர்கள் முனைப்பாக உள்ளனர். சமூக ஊடகங்களிலும் இந்த ஆவணப்படம் துண்டுத்துண்டாக பகிரப்பட்டு வருகிறது.

மோடிக்கு எதிராக போராட்டத்தை அறிவித்திருக்கும் சில குழுக்கள் தனியார் கூட்டங்களில் திரையிட்டும் வருகின்றன. இவற்றின் மத்தியில், கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளின் இளையோர் மற்றும் மாணவர் அமைப்புகள், மோடிக்கு எதிரான ஆவணப்படத்தை கையில் எடுத்துள்ளன. குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கல்லூரிகள் மற்றும் பல்வேறு கல்வி நிலையங்கள், தனியார் கூடுகைகளில் பிபிசி ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்த அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இடதுசாரிகளின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸார் உட்பட பல்வேறு இளையோர் மற்றும் மாணவர் அமைப்புகள் இது தொடர்பான பகிரங்க அறிவிப்பையும் வெளியிட்டுள்ளன.

தடையை மீறி திரையிடப்படும் ஆவணப்படத்துக்கு எதிராக மாநில அரசின் நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு முதல்வர் பினராயி விஜயனை பாஜகவினர் கோரி உள்ளனர். இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன், ‘நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பும் பிபிசி ஆவணப்படம், கேரளாவின் பல்வேறு இடங்களில் திரையிடப்படுவதை முதல்வர் உடனடியாக தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். காலனி ஆதிக்க மனநிலையோடும், உள்நோக்கத்துடனும் உருவாகி உள்ள ஆவணப்படம் திரையிடப்படுவது, நாட்டில் மீண்டும் இருவேறு சமூக மக்களிடையே பதட்டத்தை அதிகரிக்கச் செய்யும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in