கோவை யாருக்கு... தக்க வைக்கத் துடிக்கும் சிபிஎம்; தட்டிப்பறிக்க நினைக்கும் மய்யம்!

கோவை
கோவை

கோவை மக்களவை தொகுதியை தக்க வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கைப்பற்றுவதில் மக்கள் நீதி மய்யமும் மும்முரம் காட்டுகின்றன. முடிவாக இந்தத் தொகுதி திமுக கூட்டணியில் யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது.

பொதுவாக கொங்கு மண்டலத்தை அதிமுக கோட்டை எனச் சொல்வார்கள். அதற்கேற்ப கோவை மாவட்டம் கடந்த பல ஆண்டுகளாகவே அதிமுகவின் வசமே இருந்து வருகிறது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. இதில் 9 தொகுதிகள் அதிமுக வசம்; ஒரு தொகுதி மட்டும் பாஜக வசம்.

மக்களவைத் தொகுதிகளைப் பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என இரண்டு தொகுதிகள் உள்ளன. இதில், கோவை மக்களவைத் தொகுதி தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் உள்ளது. இந்த கட்சியின் சார்பில் பி.ஆர்.நடராஜன் எம்பி-யாக இருக்கிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன்
நிகழ்ச்சி ஒன்றில் கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன்

கோவை தொகுதி அவ்வளவாக திமுகவுக்கு சாதகமாக இருந்ததில்லை. 1952-ல் தொடங்கி நடைபெற்ற தேர்தல்களில் இதுவரை இரண்டு முறை மட்டுமே திமுக கோவையில் வென்றுள்ளது. 1980-ல் இரா.மோகனும், 1996-ல் எம்.ராமநாதனும் திமுக சார்பில் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் தலா 3 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி மூன்று முறை வென்றுள்ள போதும், 1989-க்கு பிறகு இங்கே காங்கிரசுக்கு வாய்ப்பு அமையவில்லை.

மநீம தலைவர் கமல்ஹாசன்
மநீம தலைவர் கமல்ஹாசன்

1998 மற்றும் 1999 தேர்தல்களில் இங்கே பாஜக வாகை சூடி இருக்கிறது. சிட்டிங் சிபிஎம் எம்பி-யான பி.ஆர்.நடராஜன் மூன்று முறை போட்டியிட்டு இதே தொகுதியில் இரண்டு முறை வென்றவர். மார்க்சிஸ்ட் கட்சியில் பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதை வைத்து, இம்முறை மீண்டும் நடராஜனுக்கு வாய்ப்புக் கிடைக்காது என்று சொல்கிறார்கள்.

சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாபன்
சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாபன்

ஒருவேளை, மீண்டும் இந்தத் தொகுதி மார்க்சிஸ்ட்களுக்கு ஒதுக்கப்பட்டால் சிபிஎம் மாவட்டச் செயலாளர் பத்மநாபன் இங்கு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கிறார்கள். இதனிடையே கோவை தொகுதியை கைப்பற்ற திமுக கூட்டணிக்குள் வேறு சில கட்சிகளும் கொக்கி போடுகின்றன.

இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டுக்குள் வரும் என பரவலாகச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் மய்யம் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் போட்டியிட்டார். சுமார் 1.45 லட்சம் வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார். 2021 சட்டப் பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் திமுக கூட்டணியில் நின்ற காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்தார். இந்தக் கணக்குகளை வைத்து மய்யமும் கோவையை குறிவைக்கிறது. மய்யத்துக்குக் கிடைத்தால் கமலே இங்கு களமிறங்குவார் என்கிறார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இதே போல் கடந்த முறை பேரவைத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் இம்முறை கோவை தொகுதிக்கு கொடி பிடிக்கிறார். காங்கிரஸ் இங்கு போட்டியிட்டு வெகு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இம்முறை அவர்களும் கோவையை தங்களுக்காக கேட்கிறார்கள். திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கும் கோவை தொகுதி மீது ஒரு கண் இருக்கிறது.

பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

மற்ற கட்சிகளை விட தங்களுக்கு சாதகமான தொகுதி கோவை என்பதால் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட பலருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், எத்தனை பேர் ஆசைப்பட்டாலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யாரை நினைக்கிறாரோ அவர் தான் இங்கு அதிமுக வேட்பாளர்.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி
அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி

பாஜகவுக்குக் கோவை சாதகமான தொகுதி தான். இருந்தாலும் கூட்டணி வலுவாக அமையாததால் அந்த கட்சிக்குள் பெரிதாக சீட்டுக்குப் போட்டி இருப்பதாக தெரியவில்லை. அண்ணாமலையே இங்கு நேரடியாக களமிறங்கலாம் என்ற பேச்சும் தாமரைக் கட்சி வட்டாரத்தில் தடதடக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை இங்கு போட்டியிட்டு தோற்ற ஜி.கே.செல்வகுமார், பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோருக்கும் இங்கு களமிறங்க ஆசை இருக்கிறது.

கோவை மக்களவைத் தொகுதிக்குள் வரும் 6 சட்டமன்றத் தொகுதிகளும் இப்போது அதிமுக வசம் இருக்கிறது. அதனால் மற்றவர்களை விட இங்கே அதிமுக வேட்பாளர்களுக்கு வேலை சுலபம். நிதி ஆதாரங்களை கவனித்துக்கொள்ள எஸ்.பி.வேலுமணி இருப்பதும் அதிமுகவினருக்கு இன்னொரு வரப்பிரசாதம்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி வெளியில் இருந்திருந்தால் இந்நேரம் கோவையின் அரசியல் வரலாற்றையே மாற்றி எழுதி இருப்பார். அவர் சிறைவாசம் போனதும் அதிமுகவினருக்கு கூடுதல் சாதகம்; திமுகவினருக்கு எதிர்பாராத பாதகம்.

கோவை மக்கள் இம்முறை தீர்ப்பை எப்படி எழுதுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in